மேலும்

கி.பி.அரவிந்தன் எனும் ஆளுமையின் 1ஆவது ஆண்டு நினைவாக… – நேர்காணல்: பகுதி 1

ki-pi-annaஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி,கவிஞர், எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் அவர்களுடன் 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல்.  நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா.

கி.பி.அரவிந்தன் என்ற ஆளுமை உலகத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட கவிஞர், எழுத்தாளர், ஒரு இலக்கியப் படைப்பாளி என்பதற்கப்பால் – ஓரு சமூகப் போராளி என்ற பரிமாணம் அவருக்கு உண்டு. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர். மாணவப் பருவத்திலிருந்து போராட்ட களத்தில் நின்றவர். ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தவரும் தமிழீழ விடுதலைக்காக முதலாவதாகக் களப்பலியான தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரனுடன் செயற்பட்ட அவரது தோழர். சிறிலங்காவின் 1972 அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்துப் போராடி சிறை சென்றவர்களில் ஒருவர்.

தொடர்ச்சியாக ஈரோஸ் அமைப்பில் இணைந்து அதன் அரசியல் மற்றும் ஊடக, எழுத்துப் பணிகளில் பங்காற்றியவர். 1990களிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த போதும் தொடர்ச்சியாக இலக்கிய மற்றும் ஊடகத் தளங்களில் காத்திரமாக இயங்கிக் கொண்டிருந்தவர். அவருடைய கவிதைத் தொகுப்பொன்று 2015 நடுப்பகுதியில்; பிரெஞ்சில்; மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ‘ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்’ என்பது அந்நூலின் தமிழ்த் தலைப்பு.

பிரான்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரியும் மொழியியலாளரும் உயர்கல்வி ஆய்வாளருமான அப்பாசாமி  முருகையன்; கி.பி.அரவிந்தன் அவர்களுடைய 30 கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

அந்தப் பின்னணியில் 2014இல், அதாவது அவர் காலமாவதற்கு 8 மாதங்களுக்கு முன்னர், நோர்வே தமிழ்3 வானொலிக்காக இந்த உரையாடல் அவரோடு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்3 வானொலிக்காக 2014 ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டு நோர்வே தமிழ்3 வானொலியில் ஒலிபரப்பப்பட்டு. பின்னர் youtube தளத்திலும் பதிவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கி.பி அரவிந்தன் மறைவிற்கு முன்னர், இறுதியாக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் இது என்ற அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. அவரது கவிதைகள் பிரேஞ் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலுருப் பெற்ற பின்னணியில் தொடங்கும் உரையாடல், ஆரம்பகாலப் போராட்டப் பங்களிப்பிலிருந்து, கலை இலக்கிய, சமூகச் செயற்பாடுகள், புலம்பெயர் வாழ்வியல், தாயக-தமிழக-புலம்பெயர் அரசியல், இளைய தலைமுறை எனப் பல்வேறு கருத்துகளை உள்ளடக்கி விரிந்து சென்றது என்ற வகையிலும் இதன் உள்ளடக்கம் பெறுமதியுடையதாகின்றது.

அவருடைய அனுபவங்களின் ஊடாக விடுதலைப் போராட்டத்தினது முக்கிய வரலாற்றுப் பக்கங்களையும், புலம்பெயர் வாழ்வியல் பற்றிய காத்திரமான பார்வையையும் பதிவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் இது. அவருடைய முதலாவது ஆண்டு நிறைவில், அவரது நினைவுகளுக்குச் சமர்ப்பணமாய் எழுத்து வடிவில் இந்நேர்காணலை வெளியிடுவது பொருத்தமும் பெறுமதியும் மிக்கதெனக் கருதுகின்றோம்.

ஒலிவடிவ நேர்காணலை எழுத்துருவாக்கித் தந்த மொழிபெயர்ப்பாளரும் புதினப்பலகையின் செய்தியாளருமான நித்யபாரதிக்கு மனமார்ந்த நன்றிகள்.

இனி நேர்காணலுக்குள் செல்வோம்:

உங்களுடைய கவிதைத் தொகுப்பொன்று அண்மையில் பிரென்ஞ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. உறைபனிக்காலக் கட்டியக்காரன் என்பது அதன் தலைப்பாக உள்ளது. இதன் பின்னணி இந்த முயற்சிக்கு எப்படி அடிகோலப்பட்டது, இது எப்படி சாத்தியமாயிற்று என்பது தொடர்பாக பகிர்ந்து கொள்ள முடியுமா?

நூல் வெளியீட்டிலிருந்து, இந்த நூல் பற்றியதான தகவல்களுடன் இந்த நேர்காணலை ஆரம்பிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன் பிரென்ஞ் தலைப்பினுடைய தமிழ் மொழிபெயர்ப்பே தவிர இந்தத் தலைப்பு நூலிலிருந்து இடம்பெறவில்லை. அதாவது பிரென்ஞ் தலைப்பு “Le messager de l’hiver “. அதாவது ‘குளிர்காலம் பற்றியதான தகவல் தெரிவிப்பவன்’ என்பதே இதன் நேரடியான மொழிபெயர்ப்பு. ஆனால் ஊடகங்களுக்கு அந்த நூல் பற்றி அறிவிக்க வேண்டும் என்கின்ற போது, நண்பர்கள் அதனை ‘ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்’ என மொழிபெயர்த்து தமிழில் இவ்வாறு தலைப்பிட்டனர்.

ஆனால் நூலில் எங்கேயும் ஓர் உறைபனிக்காலக் கட்டியக்காரன் என்ற தலைப்போ சொற்றொடரோ இடம்பெறவில்லை என்பது முக்கியமான விடயம். இந்தக் கவிதை நூலில் என்னுடைய ஏறத்தாழ முப்பது கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. நான் கடந்த காலங்களில் என்னுடைய கவிதைகள் மூன்று தொகுப்பாக வந்துள்ளன. அதாவது 2000ம் ஆண்டு வரைக்குமாக எழுதப்பட்ட கவிதைகள். மூன்று தொகுப்பிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 30 கவிதைகளே பிரென்ஞ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு,’Le messager de l’hiver’  என்ற தலைப்பின் கீழ் நூலாக வெளிவந்துள்ளது.

எந்த வகையான உந்துதலால் இந்த மொழிபெயர்ப்பு நிகழ்ந்தது,எந்தப் பின்னணியில் கவிதைகள் மொழிபெயர்ப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன?

kipi1என்னுடையமூன்றாவது கவிதைத் தொகுப்பு 1999ம் ஆண்டு வெளிவந்த ‘கனவின் மீதி’ தொகுப்பிற்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் அணிந்துரை வழங்கியிருந்தார். இந்த அணிந்துரையில் அவர் முக்கியமான விடயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய சொற்களிலேயே சொல்ல வேண்டுமாயின் ‘கி.பி அரவிந்தனுக்கு மாத்திரம் நல்லதொரு மொழிபெயர்ப்பாளர் கிடைப்பாரேயானால் அவருடைய வாசகர் வட்டம் நிச்சயம் விரியும். ஒரு நாட்டில் வாழ்கின்ற ஒரு இனத்தின் – ஒரு அகதியின் அவலத்தை இனத்தின் அவலமாக, நாட்டின் அவலமாக, உலகின் அவலமாகக் காட்டுகின்ற திறமை அரவிந்தனுக்கு கைவந்துள்ளது என்று கருதுகிறேன்’ என தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருந்தார்.

இத்தொகுப்பை நான் பல நண்பர்களிடம் வழங்கியபோது எனது நண்பராகிய அப்பாசாமி முருகையன் அவர்களுக்கு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் வார்த்தை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.

“பிரென்ஞ் மொழியில் நான் பேராசிரியராக இருக்கிறேன். இந்நிலையில் நான் ஏன் இந்தக் கவிதைகளை மொழிபெயர்க்கக் கூடாது” என அப்பாசாமி முருகையன் அவர்கள் கருதினார். அவர்தான் என்னிடம் எனது கவிதைகளை பிரென்ஞ் மொழியில் மொழிபெயர்ப்பது தொடர்பான உரையாடலை ஆரம்பித்தார். ‘இந்தக் கவிதை நூல்களை நான் மொழிபெயர்க்க விரும்புகிறேன். உங்களுடைய உதவியை வழங்க வேண்டும்’ என அப்பாசாமி முருகையன் என்னிடம் கேட்டார். தாராளமாக உதவுவதாக நானும் அவரிடம் கூறினேன். இந்த வகையில் இருவருமாகச் சேர்ந்து இதனை உருவாக்கினோம். அதாவது முருகையனினுடைய வார்த்தையில் கூறுவதானால்,

“கடந்த முப்பது ஆண்டுகளாக பாரீஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, பண்பாடு பற்றிய இலக்கியம் பற்றிய இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான ஓர் அறிமுகப்பாடத்தை  நடாத்தி வருகிறேன். இப்பாடத்திட்டத்தில் இரண்டு சிறப்புக் கூறுகிறேன். முதலாவது தமிழ் இலக்கியத் தரவுகளை மையமாக கருப்பொருளாகக் கொண்டு மொழிப்பண்பாட்டைக் கற்றல், இரண்டாவதாக புலம்பெயர் மொழி பண்பாடு மற்றும் இலக்கியம் பற்றிய ஆய்விற்கு வழிவகுத்தல். இந்தவகையில் கி.பி.அரவிந்தனின் கவிதைகள் பலவற்றை இந்தப் பட்டறைகளிலும் மேலும் எனது பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் மொழிபண்பாடு பற்றிய ஆய்வு விளக்கங்களுக்காகவும் மொழிபெயர்ப்புப் பயிற்சிக்காகவும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. இச்சூழல்களில் கி.பி.அரவிந்தனின் கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது.” என்று கூறியிருக்கின்றார் முருகையன்.

தொடக்க காலத்தில் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு கற்பிக்கும் போது   என்னுடைய கவிதைகளை மொழிபெயர்த்து ஒரு பரீட்சார்த்தமாக மாணவர்களுக்கு பிரென்ஞ், தமிழ் இரண்டு மொழிகளிலும் கற்பித்தஅவரது பரிச்சயம், தொடர்ச்சியாக எனது கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கு உந்துதலாக அமைந்தது என்பதால் இதனை அவர் ஒரு வேலைத்திட்டமாக முன்னெடுக்கலாம் என முடிவு செய்தே என்னுடைய உதவியைக் கோரியிருந்தார். அதற்கு நானும் சம்மதித்தேன்.

உங்களுடைய கவிதைத் தொகுப்புக்களான ‘இனியொரு வைகறை’ ‘முகங்கொள்’ மற்றும் ‘கனவின் மீதி’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புக்களிலிருந்து முப்பது கவிதைகள், மொழியாக்க கவிதைகளுக்கான உள்ளடக்கமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் கவிதைகளின் உள்ளடக்கத் தெரிவுகள் இடம்பெற்றன என்பது பற்றிக் கூறமுடியுமா?

புலம்பெயர் நாட்டிற்கு வந்துசேரும் ஒருவர் எதிர்கொள்ளும் அனுபவங்கள் பற்றியதான கவிதைகளையும் அதேவேளை, அவர் தாயகத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகள் –  அதாவது ஏன் அவர் புலம்பெயர வேண்டியேற்பட்டது என்பதற்கான காரணங்களை அடிப்படையாகக் கொண்ட கவிதைகள் தேர்வுசெய்யப்பட்டு அவற்றுள் சிறப்பான கவிதைகளை நாங்கள் மொழிபெயர்க்கத் தீர்மானித்தோம். இந்த அடிப்படையில் மூன்று தொகுப்புக்களிலும் இடம்பெற்ற கிட்டத்தட்ட 70 கவிதைகளில் 30 கவிதைகளைத் தெரிவு செய்தோம். புலம்பெயர் வாழ்வியல் அனுபவமும், தாயகத்தில் கவிஞர் எதிர்கொண்ட அனுபவங்களையும் – அதாவது அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாக இருந்த புறநிலைகள் பற்றி அவர் எழுதிய கவிதைகளின் ஊடாகவும் அந்த நிலைமைகளைக் கூறும் வகையில் இந்தத் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

தெரிவுப்பணி முடிக்கப்பட்டு முருகையனின் நண்பர்களின் உதவியுடன் கூட்டு முயற்சியாக பிரென்ஞ் மொழிக் கவிஞர்களின் உதவியுடனும் மொழிபெயர்ப்புக்கள் சரிபார்க்கப்பட்டு – ஒரு பிரென்ஞ் வெளியீட்டு நிறுவனத்தின் ஊடாக கடந்த ஜூன் 3ம் (2014) திகதி இந்த நூலின் வெளியீட்டு விழா பாரிசில் மிக சிறப்பாக இடம்பெற்றது. பெரும்பாலும் பிரென்ஞ் புலமைசார் கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், பிரென்ஞ்-தமிழ் தெரிந்த பிரென்ஞ்-தமிழோடு உறவு கொண்ட ஆராய்ச்சியாளர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். உண்மையில் இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. அதற்கான காணொளி மற்றும் ஒளிப்படத் தொகுப்புக்கள் கூட பல இடங்களில் பலரால் வெளியிடப்பட்டன. இத் தொகுப்புக்களின் ஊடாக இந்த நிகழ்வின் சிறப்புக்களை கண்டுணர முடியும்.

பேராசிரியர் க.சிவத்தம்பி அவர்களுடைய பாராட்டும் அவர் கூறிய கருத்தும், மொழியியலாளர்அப்பாசாமி முருகையன் அவர்களின்முனைப்பு மிக்க ஈடுபாடும் மொழிபெயர்ப்பிற்கான உந்துதலாக அமைந்தது என்றீர்கள்.புலம்பெயர் கவிஞன் ஒருவனுடைய வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் புலப்பெயர்விற்கான காரணங்களைப் பதிவு செய்யும் அதேவேளை புலம்பெயர் வாழ்வியல் சார்ந்த ஒரு வரலாற்றைப் பதிவு எனவும் எடுத்துக் கொள்ளலாமா? இந்த மொழிபெயர்ப்பின் பயன்பாட்டு முக்கியத்துவம் என்ன?

ki.piநிச்சயமாக, இது ஒரு வகையிலே, மூன்றாம் உலக நாடுகளிலிருந்து புலம்பெயரும் மனிதன், ஐரோப்பிய முதலாம் உலக செழிப்பு மிக்க நாடொன்றுக்குள் நுழையும் போது அவன் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகள்,அதாவது கலாசார அதிர்ச்சிகள், பண்பாட்டு அதிர்ச்சிகள் அல்லது அந்நாட்டின் சூழல் பற்றிய நிலைமைகள் அல்லது அவன் இங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளன.

கவிதைகளில் அவர் கண்டுகொண்ட விடயம் யாதெனில் பல புலம்பெயர் சமூகங்களின் அனுபவங்கள் இத்தமிழ்க் கவிதைகளின் ஊடாக வெளிவந்துள்ளது என்பது அவருக்கு ஆச்சரியமாக உள்ளது. அதாவது பலருடைய அனுபவங்களுடன் இவை ஒத்துப்போகக் கூடியதாக உள்ளன. இந்த அனுபவங்கள் அவ்வாறானதாகவே இருக்க முடியும். புலம்பெயர்ந்தவர்கள் எல்லோரினதும் அனுபவங்கள் ஒரே தரத்தினதாகவே இருக்கும் என்றே நான் நிச்சயமாக நினைக்கிறேன்.

புலம்பெயர்ந்தவர்கள் மொழிப் பரிச்சயமான இடங்களுக்குப் புலம்பெயர்வதற்கும் மொழி தெரியாத, கலாசார அறிமுகமில்லாத ஒரு நாட்டிற்குப் புலம்பெயர்வதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. எமது இலங்கை போன்ற நாடுகள் ஆங்கில வலயத்தைச் சேர்ந்தவை. அவர்கள் ஆங்கில வலயத்தை நோக்கிப் புலம்பெயரும் போது அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் கலாசார ரீதியானதாக இருந்தாலும் மொழி ரீதியானதாகவோஇருந்தாலும் அவர்கள் அவ்வகையான அதிர்ச்சிகளை எதிர்கொள்வதில்லை. ஆனால் ஆங்கில வலயமல்லாத பிரெஞ், நோர்வேஜிய அல்லது டெனிஸ், டச்சு மற்றும் ஜேர்மன் போன்ற ஆங்கில மொழியையே பேசத் தயங்குகின்ற மொழி மற்றும் கலாசார பின்னணியைக் கொண்ட  தேசிய இனங்கள் மத்தியில் நாங்கள் புலம்பெயர்ந்து வரும்போது நாம் கொள்கின்ற அதிர்ச்சி இன்னமும் அதிகமாக இருக்கும்.

இந்தவகையில், நான் பிரான்சுக்கு வந்துசேர்ந்ததன் பின்னர் சந்தித்த விடயங்கள் பொதுவானதாக ஒரு மொழி சாராத எந்த நாட்டிலிருந்தும் வந்திருக்கக்கூடிய புலம்பெயர்ந்தவர்களின் பொது அனுபவங்கள் அதற்குள் தெறித்துள்ளது என்பது மொழிபெயர்ப்பாளரின் கருத்தாகும்.ஆதலால் இந்தக் கவிதைக்கு ஊடாக இது ஒரு காலகட்டத்தின் பதிவு. ஏறக்குறைய 90ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட எனது பதிவுகளாக இவை காணப்படுகின்றன என்பது இங்கு முக்கியமான விடயமாகும். தற்போது 2014. இன்னமும் 10 வருடங்களுக்குப் பின்னால் எமது இளம் தலைமுறையினர் தமது மூத்த தலைமுறையினர் இங்கு எவ்வகையில் வந்தார்கள், எவ்வகையாக இந்த சமூகத்தை எதிர்கொண்டார்கள், அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் என்ன என்பது பற்றி அவர்கள் பிரென்ஞ் மொழியில் இந்தக் கவிதைகளைப் படிக்கும் போது நிச்சயமாக அவர்களுக்கு அதைத் தெரிவிப்பதான ஒரு வரலாற்றுப் பதிவாக, வரலாற்று ஆவணமாக, ஒரு தடயமாக இருக்கும். முன்னர் எமது சமூகம் இப்படித்தான் பிரச்சினைகளைச் சந்தித்தார்கள் என்பதையும்  இவற்றின் ஊடாகத் தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம் என்பதையும் இளம்தலைமுறையினருக்கு அறிவிப்பதற்கு வசதியாக இந்த மொழிபெயர்ப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த நூல் அறிமுக நிகழ்வு பிரென்ஞ் பதிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வு எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருந்தது?  உங்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது, இது வித்தியாசமான முறையில் மிகவும் கவரத்தக்கதாக நூல் அறிமுகம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டீர்கள்.; தமிழ்ச் இலக்கியத் தளங்களில் நடைபெறுகின்ற நூல் அறிமுக விமர்சன நிகழ்வுகளிற்கும் பிரென்ஞ் சமூகத்தின் இலக்கிய நூல் அறிமுக நிகழ்ச்சிகளுக்கும் இடையில் ஏதாவது வேறுபாட்டைக் காணக்கூடியதாக இருந்ததா?

இது பகிர்ந்து கொள்ளக் கூடிய விடயம் தான். நானும் எனது வாழ்வில் முதற்தடவையாக பிரென்ஞ் வெளியீட்டு நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டேன். நாங்கள் மரபு ரீதியாக நடாத்திக் கொண்டிருக்கும் நூல் வெளியீடு மற்றும் நூல் அறிமுக விழாவிற்கும் பிரென்ஞ் நூல் வெளியீட்டு விழாவிற்கும் இடையில் சில வேறுபாடுகளைக் காண முடிந்தது. மிக அதிகமான பேச்சாளர்களை அந்த மேடையில் உள்வாங்காது இருந்தமை முதலாவது வேறுபாடாகும்.

அதாவது ஒரு நிகழ்ச்சி நடத்துனர், நூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் ஆகியோருடன் அந்த நூலிற்குள் இருக்கும் பகுதியைப் படித்துக் காட்டுவதற்கு ஒருவர் ஆகிய மூன்று அல்லது நான்கு பேருக்குள் மட்டுமே இந்த நிகழ்வை அவர்கள் ஒழுங்குபடுத்துகிறார்கள். மீதிப்பேர் முன்னிருந்து அவற்றைக் கவனிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த நிகழ்வு இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெற்றதை நான் அவதானித்தேன். ஏறத்தாழ 60-70 பேர் கொண்ட ஒரு சிற்றரங்கிற்குள் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இதனை ஒழுங்குபடுத்தியவர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆகிய மூன்று பேர் மட்டுமே நாங்கள் மேடையில் இருந்தோம். அந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியவரே இந்த நூலின் உட்பகுதியைப் படித்தார். நூல் பற்றிய விமர்சனம் இங்கு கொண்டு வரப்படவில்லை. அதற்காக யாரும் நியமிக்கப்படவில்லை.

முதலில் அறிமுகம் ஒன்றைச் செய்தார்கள். அதாவது இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலின் பெயர் என்ன, இதன் ஆசிரியர் யார் போன்றவற்றை விழாவை ஒழுங்குபடுத்தியவர் தெரிவித்தார். இதன் பின்னர் இதன் மொழிபெயர்ப்பாளர் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்கள் மற்றும் இந்த நூலைத் தயாரித்த முறை தொடர்பாகவும் எடுத்துக்கூறினார். இந்த நூலாசிரியர் என்ற வகையில் நான் இந்தக் கவிதைகளை எவ்வாறு எழுதினேன் என்பது தொடர்பாகவும் கூறினேன். இந்தமூவரினதும் கருத்துரைகள் மட்டுமே இடம்பெற்றன. அதன் பின்னர் இந்த நூலில் உள்ள நான்கு கவிதைகளை நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தியவர் தெரிவு செய்து வைத்திருந்தார். அதனைத் தான் வாசிக்கவுள்ளதாகவும் இதன் தமிழ் மொழிபெயர்ப்பை ஆசிரியர் வாசிப்பார் எனவும் தெரிவித்தார். முதலாவது கவிதையை வாசிக்க அதன் தமிழ் வடிவத்தை நான் ஆசிரியர் என்ற வகையில் வாசித்தேன்.

இது வேறு வகை நூலாக இருந்தால் அதிலிருந்து சில பக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு படிக்கப்படும். கட்டுரையாயின் ஒரு அத்தியாயம் படிக்கப்படும். இவ்வாறு நூலிற்குள் இருந்துதான் ஒரு விடயத்தை அவர்கள் பார்வையாளர்கள் முன் வைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் இதில் படிக்கப்பட்ட கவிதைகள், முன்னாள் நிகழ்த்தப்பட்ட அறிமுக உரைகள் இவைகளை வைத்துக் கொண்டு பார்வையாளர்களுக்கும் நூலாசிரியர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் ஆகியோருக்கிடையில் உரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. படிக்கப்பட்ட கவிதைகளில் தங்களுக்குப் பிடித்த பகுதி என்ன, தங்களுக்குப் பிடிக்காமல் போன பகுதி என்ன, உங்களுடைய வரலாற்றில் இந்தக் கவிதைகள் எவ்வாறானதாக உள்ளன என்பது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

உதாரணமாக இதில் படிக்கப்பட்ட நான்கு கவிதைகளில் ஒன்றான காலம் கனிகிறது என்கின்ற கவிதை சிவகுமாரன் பற்றியதாகும். அது நான்காவதாகப் படிக்கப்பட்டது. அந்தக் கவிதையை பிரென்ஞ் மொழியில் நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தியவர் படித்தார். அதன் தமிழ் வடிவத்தை நான் படித்தேன். அந்தக் கவிதையிலிருந்தே உரையாடல் ஆரம்பமாகியது.

அந்த நண்பர் எத்தனையாம் ஆண்டு இறந்தார் என அவர்கள் என்னிடம் கேட்டார்கள். 1974ம் ஆண்டு என நான் கூறினேன்.  அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 74ம் ஆண்டு சயனைட் அருந்தி இறந்தாரா எனக் கேட்டனர் அதற்கு நான் “ஆம் சயனைட் அருந்தி இறந்தார்” எனக் கூறினேன். அவர்களுக்கு இது புதுச்செய்தி. ஏனெனில் பொதுவாகவே 1983 இற்குப் பின்னால் தான் இலங்கையில் பிரச்சினை இருப்பதாகவும், அதற்குப் பின்னால் தான் அங்கு போராட்டங்கள் வெடித்ததாகவும்,தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இதனை நடாத்தியதாகவும் மட்டுமே பொதுப்புத்தி இருக்கின்ற நிலையில் என்னுடைய கவிதை 74ம் ஆண்டு இறந்து போன நண்பனைப் பற்றியதான பகிர்தலுடன் இருந்தபோது அது அவர்களது அதிர்ச்சியை மேலாக்கியது.

பின்னர் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், கதிரைகளை ஓரமாக வைத்துவிட்டு நின்றுகொண்டு தமக்கிடையே உரையாடினார்கள். அத்துடன் ஆசிரியருடனான உரையாடல், புத்தகம் வாங்குதல், புத்தகங்களில் கையெழுத்து வாங்குதல் போன்றன இடம்பெற்றன. இந்த நூலை வாங்கிய அவ்வளவு பேரும் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள் என்பது மிக முக்கியமான விடயம்.

இரண்டாவதாக, நான் நோய்நிலையில் இருந்த நிலையிலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் நான் திருப்தியடைவதற்கும் என்னை மகிழ்ச்சிப்படுத்தியதுமான விடயம் என்னவெனில் புத்தகம் வாங்கியவர்கள் அனைவரும் என்னிடம் கையெழுத்துப் பெற்ற போது ‘உங்களது மொழி நாங்கள் இதுவரை கேட்டதில்லை ஆயினும் மிகவும் அழகாக, அதைக் கேட்க இதமாக இருந்ததாகக்’ கூறினார்கள்.  எனது மொழி அவர்களைச் சென்றடைந்தது என்பதும் அவர்களுக்கு அது சுவையாக இருந்தது என்பதும் உண்மையில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நூல் வெளிவந்ததை விடவும் தமிழில் அந்தக் கவிதைகளை வாசித்தது என்பதும் அதற்கு ஊடாக தமிழ் மொழி பற்றிய அவர்கள் பெற்றுக்கொண்ட அனுபவம் எனக்கு மகிழ்ச்சியளித்தது.

எங்களுடைய நிகழ்வுகளில் இவை நேரெதிராக இருக்கும். நாங்கள் நூலை வாசிக்காத பார்வையாளர்களை முன்னுக்கு கொண்டு வந்து வைத்துவிட்டு ஒருவரிடம் நூலைக் கொடுத்து வாசிக்குமாறு கேட்போம். அவர் 10-15 நிமிடம் உரையாற்றும் போது பார்வையாளர்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக் கொண்டு இருப்பார்கள். அதாவது நூல் தொடர்பான முன்னுணர்வு இல்லாது யாரோ ஒருவர் வாசிக்க அவர் கூறும் நூல் பற்றியதான கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் விரும்பினால் புத்தகத்தை வாங்கிக்கொண்டு அப்படியே கிளம்பிச் செல்வது. இங்கே ஆசிரியருக்கோ, மேடையில் நிகழ்த்தப்பட்டவைக்கோ, பார்வையாளர்களுக்கும் இடையில் எவ்வித உறவோ உரையாடலோ நிகழ்வதற்கான வாய்ப்பு எமது மேடை அமைப்பில் மற்றும் நிகழ்ச்சி அமைப்பில் இல்லை.

சிலவேளைகளில் கடைசியில் ஒரு சாட்டாக கேள்வி உள்ளவர்கள் கேளுங்கள் எனச் சொல்லப்படும் வழக்கம் உண்டு. ஆனால் கேள்வி உள்ளவர்கள் எப்படிக் கேட்பார்கள். ஏனெனில் இவர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கமாட்டார்கள். மேடையில் பேசியவர் மட்டும் புத்தகத்தை வாசித்து விட்டுப் பேசியிருப்பார். ஆகவே பார்வையாளர்கள் எங்கிருந்து கேள்வி எடுக்க முடியும்? நூலிலிருந்து ஒரு பகுதியைப் பார்வையாளருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கின்ற விடயம் எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு ஊடாகக் கிடைத்தது. இதை ஒரு முக்கிய விடயமாக நான் கருதுகிறேன்.

இது ஒரு முக்கியமான விடயமாகவும் முக்கியமான நிகழ்ச்சியாகவுமே பார்க்க முடியும்.அந்த வகையில் ஒருவழித் தொடர்பாடலாக இல்லாது, வாசகர்கள், இலக்கிய கர்த்தாக்கள் போன்றோர் பரஸ்பரம் உரையாடிக் கொள்ளக் கூடிய, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக இருப்பதும் அவரவர் தங்களுடைய வாசிப்பு அனுபவத்தின் ஊடாகப் புரிந்து கொள்வதற்கான வெளி அங்கே இருப்பதுவும் முக்கியமான விடயமாகவே நோக்கப்பட வேண்டும்.

உங்களுடைய மொழிபெயர்ப்பு நூல் என்பது புலம்பெயர் இளைய தலைமுறையினருக்கும் இலக்கிய கர்த்தாக்களுக்கும் இடையில் ஒரு தூண்டுதலாக அமையும். இரு மொழி பண்பாட்டு சமூக சூழலில் புலம்பெயர் சூழலில் மொழிபெயர்ப்பு என்பது முக்கியத்துவம் பெறுகிறது. வாழும் நாட்டு மொழியில் எமது படைப்புக்களை வெளிப்படுத்துவதும் அத்தோடு நேரடியாக வாழும் நாட்டு மொழிகளில் படைப்பதுவும் எழுதுவதும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. இது சார்ந்த உங்களுடைய பார்வையைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

இலக்கியம் என்பது நிச்சயமாக இரு தளங்களில் நிகழ்த்தப்பட வேண்டும் என்பது உண்மை. அதாவது தமிழர்களுக்கான இலக்கியம், மற்றையது தமிழ் அறிமுக இலக்கியம் என இரண்டு வகைப்படுகிறது. அரசியலிலும் இவ்விரு பிரிவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன். தமிழர்களுக்கான அரசியல், தமிழர் அரசியல் என இரண்டு வகையான பிரிவுகள் உள்ளது போன்று தமிழர்களுக்கான இலக்கியம், தமிழர் இலக்கியம் என இரண்டு விடயங்கள் காணப்படுகின்றன. தமிழர்களுக்கான இலக்கியம் என்பது தமிழில் எழுதுவதாகும். தமிழில் தமிழ் சமூகத்தை நோக்கி எழுதுதல், தமிழ் சமூகத்திற்குள் எங்களது ஆக்கங்கள், படைப்புக்களை தமிழில் கூறுவதாகும்.

அடுத்த கட்டமாக எமது தமிழ் இலக்கியத்தை ஏனைய மொழிப் பண்பாட்டு வட்டத்திற்குள் கொண்டு செல்வதாகும். அதாவது மொழிபெயர்த்தல் அல்லது அந்த மொழியிலேயே எழுதுதல். அதாவது நோர்வேயில் நொஸ்க் என்ற மொழி இருக்குதென்றால் அந்த மொழியை நீங்கள் படித்திருந்தால் அந்த மொழியில் தமிழர்களின் பிரச்சினையை வெளிக்கொண்டு வருதல் அல்லது நீங்கள் தமிழில் கூறியதை நொஸ்க் மொழியில் மொழிபெயர்த்தலாகும். இந்த இரண்டு வகைச் செயற்பாடுகளும் இன்று மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது. ஆனால் நாங்கள் இன்று வழிதெரியாத நிலையில் எவ்வகையாக சமூகங்களை அணுகுதல், சமூகங்களுக்கு இடையில் எம்மை எவ்வாறு அறிமுகப்படுத்துதல் என்னும் விடயத்தில் நேரடி அரசியல் என்பதை விட இலக்கிய வழியின் ஊடாகக் கதவைத் திறத்தல் மிக மிக முக்கியமானது. காலத்திற்கு மிகவும் தேவையானது என்பதே எனது கருத்தாகும்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *