சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பம்
சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முதல் சுயாதீன வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் பணியை மேற்கொள்ளும் நிபுணர் குழுவின், ஆரம்ப கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் கூட்டப்பட்ட இந்தக் கூட்டம், நாட்டின் நீதி அமைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படி என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான இந்தக் குழுவில், சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, நீதி அமைச்சின் செயலாளர் அயிஷா ஜினசேன, சிறிலங்கா சட்டவாளர் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய, அதிபர் சட்டவாளர்கள், ரியன்சி அர்சகுலரத்ன, யு.ஆர். டி சில்வா மற்றும் மூத்த சட்ட மற்றும் நீதித்துறை பிரமுகர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தின் கட்டமைப்பு, அதிகாரங்கள் மற்றும் ஆணையை கோடிட்டுக் காட்டும் வரைவு கருத்துருவைத் தயாரிப்பதே இந்தக் குழுவின் உடனடிப் பொறுப்பாகும்.
இது முடிந்ததும், சிறிலங்காவின் குற்றவியல் நீதி அமைப்பிற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நிறுவனமாக எதிர்பார்க்கப்படுவதை வடிவமைப்பதில் பரந்த பங்களிப்பை உறுதிசெய்து, பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து கருத்துக்களைப் பெற அமைச்சு திட்டமிட்டுள்ளது.

