சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான் வழங்கவுள்ள இரண்டு வகையான ட்ரோன்கள்
சிறிலங்கா கடற்படைக்கு இரண்டு வகையான ட்ரோன்களை ஜப்பான் வழங்கவுள்ளதாக, கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் ஜப்பானிய பயணத்தின்போது, இறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி (OSA) திட்டத்தின் அடிப்படையில், சிறிலங்கா கடற்படைக்கு 500 மில்லியன் யென் பெறுமதியான ட்ரோன்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான் பயிற்சிகளையும் வழங்கவுள்ளது.
ஜப்பானிய தூதரகத்தின் தகவல்களின்படி, அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ் கண்காணிப்பு, மேற்பார்வை மற்றும் பேரிடர் நிவாரணத்திற்காக இரண்டு வகையான- ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ட்ரோன்கள் வழங்கப்படும்.
இந்த திட்டம் சிறிலங்காவின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்திய உறுதித்தன்மையை பராமரிப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு திறன்களையும், ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பு திறன்களையும் மேம்படுத்துவதற்காக – ஜப்பானின் பாதுகாப்புக் கொள்கையின் மூலோபாய மாற்றத்திற்கு ஏற்ப, 2023 ஏப்ரலில் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, சிறிலங்கா விமானப்படை இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தியது.
சிறிலங்கா கடற்படை ட்ரோன்களை இயக்கும் திறனைக் கொண்டிருந்தாலும், ஜப்பான் வழங்கும் ட்ரோன்களை போன்ற முயற்சி எதுவும் இதுவரை முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜப்பானிய தூதரகத்தின் தகவல்படி, சிறிலங்காவுக்கான முதல் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டம், பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்பதை கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.
கிழக்கு திமோர், இந்தோனேசியா, மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சிறிலங்கா, தாய்லாந்து மற்றும் டோங்கா ஆகியவை அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டத்தின் மூலம் அண்மையில் உதவியைப் பெற்ற நாடுகளாகும்.
முன்னதாக, பங்களாதேஷ், ஜிபூட்டி, பிஜி, இந்தோனேசியா, மலேசியா, மங்கோலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை இந்த உதவியைப் பெற்றன.
