மேலும்

மாறுகிறதா கூட்டணி கணக்குகள்? – தி.சிகாமணி

tamilnadu electionதனித்துப் போட்டி அல்லது தனது தலைமையில் கூட்டணி என்று தேமுதிக அறிவித்திருப்பது, தேர்தல் களத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலமுனை போட்டி ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வழக்கமாக கடந்த 25 ஆண்டுகாலமாக ஆளும் கட்சிக்கு எதிராக விரிவான கூட்டணி உருவாகி வந்தது. இந்தத் தேர்தலில் அதற்கான சாத்தியம் குறைந்துவிட்டது. தேமுதிக முடிவு திமுகவுக்கு ஏமாற்றத்தையும் சோர்வையும் தரக்கூடும். இதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு சில நாட்கள் பிடிக்கலாம்.

ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பெரிய அளவில் பிரதான எதிர்க்கட்சிக்குப் போகும் நிலைமையில் 2014 மக்களவைத் தேர்தலில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எனினும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்குத்தான் முழுமையாக சிந்தாமல், சிதறாமல் வரும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் கூட்டணி பலம் குறித்து கவலைப்படாமல் ஆட்சியை வீழ்த்தும் சக்தி யாருக்கு உள்ளது என்பதைப் பார்த்து மக்கள் வாக்களிப்பார்களா? மாற்று பேசுபவர்களின் கடந்தகாலத்தைப் பரிசீலித்து முடிவுக்கு வருவார்களா? என்பதே இப்போதுள்ள கேள்வி.

மாற்று என்ற முழக்கத்துடன் வந்த ராமதாஸ், வைகோ ஆகியோர் திமுக, அதிமுக-வுடன் மாறி மாறி கூட்டணி வைத்துவிட்டனர். விஜயகாந்த் 2011ல் அதிமுக-வுடன் மட்டும் சேர்ந்துள்ளார். கூட்டணி என்று வந்துவிட்டால் ‘உன் வாக்கு வங்கி மூலம் சீட், என் செல்வாக்கு மூலம் உனக்கு ஆட்சி அதிகாரம்’ என்பதே நடக்கிறது. ஆனால் உங்கள் கட்சிக்கு அங்கீகாரம், சின்னம் எங்களால்தான் கிடைத்தது என்று திமுக, அதிமுக சிறிய கட்சிகளைப் பார்த்து ஏளனம் செய்வதும், நன்றி இல்லை என்று பேசுவதும் வாடிக்கையாக இருக்கிறது.

கொடுக்கல் வாங்கல்போல் காரிய சாத்தியம் என்பதே கூட்டணிக்கு அடிப்படை. ஒருசில விதிவிலக்குகள் தவிர்த்து, கொள்கை என்பதே இரண்டாம்பட்சம். பொதுவாக, இதில்தான் தீண்டாமைப் போக்கு மிகக் குறைவு. 1967 முதல் இதற்கு நீண்ட வரலாறு உள்ளது 100 சதவிகித கருத்து ஒற்றுமையுடன் ஒரு கூட்டணி உருவாக முடியாது. முரண்பாடான கூட்டணி என்று விமர்சனக் கணை வந்தாலும் கட்சிகள் அலட்சியப்படுத்திவிடும்.

இப்போது எழுந்துள்ள சூழலில் தேமுதிக-வை மக்கள் நலக் கூட்டணி தங்கள் பக்கம் இழுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதிக இடங்களைக் கொடுத்து தேமுதிக-வுடன் அணி சேர முடியும். சமீபகாலம் வரை பாஜக-வுடன் கூட்டணி மற்றும் பேச்சுவார்த்தை என்று இருந்த தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி எனும் மதச் சார்பற்ற அணியில் சேர்வதை மக்கள் ஏற்பார்களா?

வெற்றிக்கோட்டைத் தொட வாய்ப்புள்ள கட்சிகள் மட்டும்தான் தனித்துப் போட்டியிட வேண்டுமா? தனித்தோ, சிறிய கட்சிகள் சேர்ந்தோ போட்டியிடுவதால் ஒரு பெரிய கட்சிக்கு வெற்றிவாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதால் அத்தகைய முடிவை எடுக்கக்கூடாதா? தனித்துப் போட்டி என்பதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் ஒன்று, சில கட்சிகளால் தொண்டர்களை தக்கவைக்க முடியாமல் போவது. என்றாவது ஒருநாள் ஆட்சிக்கு வருவோம் என்று நம்பும் அளவுக்கு வாக்கு வங்கி உள்ள கட்சிகளின் தொண்டர்கள் தொடர்ந்து ஒரே கட்சியில் இருப்பார்கள். எனக்கு குழப்பமில்லை என்று தெரிவித்துள்ள விஜயகாந்த்தால் கூட்டணி அரசியலில் இப்போதைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் முடிவால் ஏமாற்றம் யாருக்கு? லாபம் யாருக்கு? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இப்போது, இன்று கூட்டணிக்காகக் காத்திருந்தவர்கள், காத்திருப்பவர்கள், மாற்று பேசுபவர்கள், தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறுபவர்கள் கடந்த காலங்களில் கூட்டணி அமைப்பதில் ஏற்படுத்திய அதிர்ச்சிகள், ஆச்சரியங்களைப் பார்க்கலாம்.

முதலாவதாக 1967 பொதுத்தேர்தல். இதில் கூட்டணி அமைப்பதில் ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. மார்க்சிஸ்ட் கட்சி காலமெல்லாம் தொழிலாளர் பக்கம் நிற்கும் கட்சி. சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி முதலாளிகள் பக்கம் நிற்பவர். காலமெல்லாம் கம்யூனிஸ்ட்டை எதிர்த்தவர். லைசன்ஸ் ராஜ்ஜியம் நடத்துகிறார் என்று ராஜாஜி ஆட்சியை மார்க்சிஸ்டுகள் விமர்சித்தனர். ஆனால் 1967 தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இணைந்து ஆச்சர்யப்படுத்தினர்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை.

அடுத்த தேர்தல் 1971. காலமெல்லாம் எதிரிகளாக இருந்த திமுக-வும் காங்கிரசும் கூட்டணி அமைத்தன. எந்த காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதே முதல் வேலை என்று திமுக கூறியதோ, அதே காங்கிரசுடன் கூட்டணி வைத்தது. இதே தேர்தலில், எதிர் அணியில் ஒரே கட்சியில் இருந்தாலும் தனிக் கட்சிகளாகப் பிரிந்தாலும் எந்த இரண்டுபேர் பரம வைரிகளாக இருந்தனரோ அதே காமராஜரும் ராஜாஜியும் ஒரே அணியில் இணைந்தனர்.

அடுத்து, 1977 தேர்தல்; அவசரநிலைப் பிரகடனத்தை ஆதரித்த எம்.ஜி.ஆரின் அதிமுக-வுடன் அவசரநிலையால் பாதிப்புக்குள்ளான மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி சேர்ந்தது.இதேபோல, அவசரநிலைப் பிரகடனத்தால் கடுமையாக முடக்கப்பட்டு, தாக்குதல்களுக்கு ஆளான திமுக, காங்கிரஸ் கட்சியுடன் 1980ல் கூட்டணி அமைத்தது.

அடுத்து 1998. மதவாதக் கட்சி என திராவிடக் கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்தது. தொடர்ந்து 1999ல் திமுக-வும் பாஜக உடன் கூட்டணி வைத்தது. இன்னொரு திராவிடக் கட்சியான மதிமுக-வும் இக் கூட்டணிகளில் இடம்பெற்றது.

2004 திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரசும் மார்க்சிஸ்ட்டும் இணைந்தன. இதோடு, கேரள சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது. அங்கு காங்கிரசும் மார்க்சிஸ்ட்டும் எதிரெதிர் அணியில் மோதிக்கொண்டன. பக்கத்து பக்கத்து மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் எதிரணியில் நின்ற கட்சி மற்றொரு மாநிலத்தில் கூட்டணி சேர்ந்த அதிசயம் நடந்தது.

கேட்டால், கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி இல்லை; தொகுதி உடன்பாடுதான் என்பார்கள்.இப்போது சொல்லிக்கொள்ளும்படியான கூட்டணிகள் அமையவில்லை. ஒருவகையான பலப்பரீட்சையா அல்லது கடைசி நேரத்தில் மாற்றங்கள் நிகழுமா, பொறுத்திருந்து பார்க்கலாம்.

– தி.சிகாமணி (மூத்த ஊடகவியலாளர்)

வழிமூலம் – மின்னம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *