மேலும்

ராஜீவ் காந்தி கொலை பெருந்தவறு – அன்ரன் பாலசிங்கம் ஒப்புக்கொண்டதாக கூறுகிறார் சொல்ஹெய்ம்

anton-balasingamஇந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலைப் புலிகள் செய்த பெரும் தவறு என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான அன்ரன் பாலசிங்கம் ஒப்புக் கொண்டார் என்று நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பாக மார்க் சோல்ட்டர் எழுதியுள்ள, “To End A Civil War” என்று நூலிலேயே, எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்த இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

“ராஜீவ் காந்தி கொலையில் உள்ள தொடர்பை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும், முதலில் மறுத்தனர் என்று அன்ரன் பாலசிங்கம் என்னிடம் கூறினார்.

1991 மே 21ஆம் நாள் அந்தக் கொலை நடந்து சில வாரங்கள் கழித்து அவர்கள் அன்ரன் பாலசிங்கத்திடம் உண்மையை ஒப்புக் கொண்டிருந்தனர்.

ராஜீவ்காந்தி கொலை விடுதலைப் புலிகளின் பெரிய தவறு என்று பாலசிங்கம் ஒப்புக்கொண்டார். தனிப்பட்ட முறையில் அவர், ராஜீவ் காந்தியின் கொலை ஒரு முழுமையான பேரழிவு என்று குறிப்பிட்டார்.

சிறிலங்காவுக்கு இந்தியப் படைகளை அனுப்பி தமிழர்களைப் படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையிலும், அவர் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் மீண்டும் படைகளை அனுப்பலாம் என்று கருதியுமே அவரைப் படுகொலை செய்ய பிரபாகரன் விரும்பியதாக பாலசிங்கம் தெரிவித்தார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு லண்டனில் தனது இறுதிக்காலத்தைக் கழித்த அன்ரன் பாலசிங்கம்,  அமெரிக்கா, ஐரோப்பாவுடன் இணக்கத்தை ஏற்படுத்த முனைந்தாலும், அவரது உண்மையான நாட்டம் இந்தியா மீதே இருந்தது.

2006ஆம் ஆண்டு தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் அவர், ராஜீவ் காந்தி படுகொலை தவறுக்காக மன்னிப்புக் கோருவதற்கு முயற்சி செய்தார்.

ஒருமுறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை போர்ப்பிரபு என்று குறிப்பிட்ட அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளை அரசியல் நிறுவனமாக மாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும், என்னிடம் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் தவறுகளையும் ஒப்புக்கொள்ளும் நேர்மை அன்ரன் பாலசிங்கத்திடம் இருந்தது.

காலப் போக்கில் பாலசிங்கத்தை நான் ஒரு உயர்ந்த மனிதனாக- நல்ல நண்பனாக  கருதினேன்.” என்றும் எரிக் சொல்ஹெய்ம் இந்த நூலுக்குத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *