மேலும்

தொடர்கிறது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் – நாடாளுமன்றில் இன்று சிறப்பு விவாதம்

prisionமகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரும் அரசியல் கைதிகளில் நான்கு பேரின் நிலைமை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அரசியல் கைதிகள் விவகாரம் மற்றும் காணாமற்போனோர் விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டு வந்துள்ள ஒத்திவைப்பு வேளை பிரேணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன் பின்னர், அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக தீர்மானம் எடுக்க முடியும் என்றும் எனவே, அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுமுன்தினம் கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனாலும் அந்தக் கோரிக்கையை நிராகரித்து நேற்று 15ஆவது நாளாகவும், மகசின் சிறையில் உள்ள 14 அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகளில் மூன்று பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றொரு அரசியல் கைதி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மார்க்கண்டு நேமிநாதன் (வயது – 43) கச்சாய், அகஸ்ரின் ஞானசீலன் (வயது 28)உடையார்கட்டு, பாலசுந்தரம் மனோகரன் (வயது 42) கிளிநொச்சி சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் (வயது 37 மானிப்பாய்) ஆகியோரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், நேற்று யாழ். முனியப்பர் ஆலயம் முன்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் வடமாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார், சட்டவாளர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *