மேலும்

மிச்சமென்ன சொல்லுங்கப்பா? – கி.பி.அரவிந்தனின் இறுதிக்கால கேள்வி – யதீந்திரா

ki-pi-annaஅரவிந்தன் அண்ணன் பிரிந்து ஒரு வருடமாகின்றது. ஒவ்வொரு வருட முடிவிலும் இவ்வளவு விரைவாக காலம் கடக்கிறதே என்னும் பெருமூச்சு மட்டும் மிச்சமாகிக் கனக்கிறது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஈழ அரசியல் உரையாடல்களுடன் இரண்டறக் கலந்துகிடந்த அரவிந்தன், ஈழ அரசியலின் எதிர்காலம் பெருமளவிற்கு கேள்விக் குறியாகிவிட்ட ஒரு சூழலில்தான், எங்களை விட்டு நீங்கினார். அவரில்லாத இந்த ஒரு வருடம் வழமையான பெருமூச்சுக்கள், வழமையான அங்கலாய்ப்புக்கள் மேலும் வழமையான தடுமாற்றங்களாகவே கழிந்து சென்றது.

அரவிந்தன் பற்றி ஒரு சில விடயங்களை எழுதுவது என்றவுடன் முதலில் எதைப் பேசுவது என்னும் வினாதான் துருத்திக் கொண்டு முன்நிற்கிறது.

அரவிந்தன் பற்றி எண்ணும் போது, அவர் பற்றி பல விடயங்களை பேசலாம். ஏனெனில் அவரது வாழ்வில் பல பாத்திரங்களை அவர் விரும்பியே ஏற்றிருந்தார். அந்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவருக்கு ஒவ்வொரு முகத்தை வழங்கியிருந்தது.

முதலில் அவர், ஆயுத விடுதலைப் போராட்ட அமைப்புக்களில் ஒன்றான ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர். 90களில் ஈரோஸ் அமைப்பு கலைக்கப்பட்ட பின்னரான சூழலில்தான், அவரது பிற்கால முகமான புலம்பெயர் செயற்பாட்டாளர், கவிஞர், இணையத்தள நெறியாளர் போன்ற முகங்களை அவர் அணிந்து கொண்டார்.

நான் நினைக்கிறேன், இப்படி பல முகங்களில் அவர் இயங்கியிருந்தாலும் கூட, கவிஞன் என்னும் முகம்தான் பெருமளவுக்கு அரவிந்தனை மற்றவர்கள் மத்தியில் நிலைநிறுத்தியது. இப்படி பல முகங்களில் இயங்கிய போதிலும், ஈழ அரசியலிருந்து அரவிந்தன் எப்போதும் தன்னை துண்டித்துக் கொண்டதில்லை. அந்த அரசியல் தேடல்தான், அவரது வயதையும் கடந்து புதிய தலைமுறையுடனும் அவரை பிணைத்தது. நான் அவருக்கு நண்பனான பின்னணியும் இதுதான். அவரும் எனக்கும் சில வருட பழக்கம்தான். ஆனாலும் அது ஒரு அர்த்தமுள்ள பழக்கமாக இருந்தது.

ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம், அரவிந்தன் இப்படி பல முகங்களில் அறிமுகமான காலத்தில், அவர் அரசியலை தன்னுடைய ஆரம்பகால புரிதலில் வழியாக மட்டுமே, அசைபோட்டுக் கொண்டிருக்கவில்லை. ஈரோஸ் இயக்கம் கலைக்கப்பட்ட பின்னர், அரவிந்தன் அயுதப் போராட்ட அரசியலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டார். ஈரோஸ் இயக்கம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் ஒரு பகுதியினர், க.வே.பாலகுமாரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஐக்கியமாகி, அதனுள்  கரைந்து போயினர். உடன்படாதவர்கள் வேறு வழிதேடினர். இதில் அனேகரின் தெரிவு ஒதுங்கி, ஓரமாகிப் போவதாகவே இருந்தது. அவ்வாறு ஒதுங்கியவர்களில் வரிசையில்தான் அரவிந்தனும் வருகிறார்.

பாலகுமார் விடுதலைப்புலிகளுடன் உடன்பட்டுக் கொண்ட போது, அரவிந்தன் அந்த அணியில் இருக்கவில்லை. அதன் பொருள், அரவிந்தன் தன்னை விடுதலைப்புலிகளுக்குள் கரைக்க விரும்பவில்லை என்பதுதானே! ஆனாலும் அன்று பலரையும் ஒரு சங்கடம் ஆட்படுத்தியது. ஓடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்னும் வகையில், விமர்சனங்கள் இருந்தபோதிலும் கூட, பெரும்பாலானவர்களது தெரிவு விடுதலைப் புலிகளாகவே இருந்தது. அரவிந்தன் எனக்கு அறிமுகமாகிய காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகவே இருந்தார். ஆனாலும்; அவரிடம் விமர்சனங்கள் இருந்ததை நானறிவேன். அவர் விமர்சனமற்றவராக இருந்திருந்தால் எனது (2009இற்கு பின்பான) எழுத்துக்கள் அவரால் நெறிப்படுத்தப்பட்டு புதினப்பலகையில் இடம்பெற்றிருக்காது.

000000

2009, பலரையும் நிலைகுலைத்தது போன்று அரவிந்தனையும் பாரதூரமாகவே நிலைகுலைத்தது. அனைவரும் நிலைகுலைந்து போன அந்த நாட்களில் நானும் அவரும், அவ்வப்போது நிலைமைகள் பற்றி பேசுவதுண்டு. ஆனால் அவர் எதனையும் எனக்கு அழுத்திக் கூறுவதில்லை. தங்களுடைய அனைத்து மதிப்பீடுகளும் பிழைத்துப் போன பின்பு, ஈழ நிலத்தில் தொடர்ந்தும் கால்பதித்திருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு எதனையும் அழுத்திச் சொலும் தகுதிநிலையில் தான் இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்கலாம்.

2009இற்கு பின்னர் எது எப்படியோ, அதனை அங்கிருக்கும் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதில் அவரிடம் தெளிவான பார்வையிருந்தது. அதன் காரணமாக நான் என்னுடைய விமர்சனங்களை வெளியிட்ட போது, அதனை பிரசுரிப்பதில் அவர் பின்நிற்கவில்லை. அரவிந்தன் எந்தளவிற்கு நிலைகுலைந்து போயிருந்தார்? அவரின் பிந்தைய வெளியீடான ‘மிச்சமென்ன சொல்லுங்கப்பா’ என்னும் கவிதைத் தொகுப்பின் முகவுரையில் அவர் எழுதியிருக்கும் பின்வரும் இருவரிக்குறிப்பு அவரது நிலைகுலைவை தெளிவாக பதிவுசெய்திருக்கிறது.

“ஈழத்தமிழரின் வாழ்விலும் இருப்பிலும் இன்று என்னதான் மிஞ்சியுள்ளது? அந்தக் குழந்தைக்குச் சொல்வதற்கு அப்பனிடம் மிச்சம் மீதம் என்ன இருக்க முடியும்?”

ஒரு சிறிய இனம் தன்னுடைய ஆற்றல் வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி, செலவு செய்து இறுதியில் எல்லாவற்றையும் இழந்துவிட்ட ஒரு சூழலில், ஒரு கவிஞனின் சிந்திப்புத்தான் மேற்படி வரிகள். ஒரு காலத்தில் தமிழ் மக்களுக்கான சுதந்திர தேசம் ஒன்றை கனவு கண்டு, அதற்காக வீடு துறந்து பயணித்த அரவிந்தன் என்னும் ஒரு விடுதலைப் போராளியிடமிருந்த, எஞ்சிய நம்பிக்கையும் காலமாகிவிட்டது என்பதையே மேற்படி வரிகள் உணர்த்துகின்றன. அரவிந்தனிடமிருந்து, இப்படியான வார்த்தைகள் வெளிப்படும் வரையான காலப்பகுதியில் நடந்தவைகள் என்ன? இதற்கான பதிலை தேடும் பொறுப்பை, காலம் புதிய தலைமுறையிடம் விட்டுச் சென்றிருக்கிறது.

என்னளவில், அரவிந்தன் போன்றவர்களை நினைவு கொள்வதென்பது, கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பதும், அதில் எடுக்கக் கூடியதை எடுத்துக் கொண்டு, விட்டுவிட வேண்டியதை விட்டுவிடுவதும்தான். விட்டுவிட வேண்டியதை எடுத்துச் செல்ல முற்படும் போதெல்லாம், முன்னர் அதனை விட்டுவிட மறுத்தமையால் என்ன நிகழ்ததோ, அதுவே மீண்டும் நிகழும்.

000000

அரவிந்தனை நினைவு கூர்பவர்கள் பலரும் அவரவர் நட்பின் எல்லைக்குள் நின்றவாறு பலதையும் பகிரலாம். ஆனால் ஒரு விடுதலை இயக்க போராளியை, அரசியல் செயற்பாட்டாளனை நினைவு கொள்வதென்பது, ஒரு புதிய  உரையாடலுக்கான அடித்தளமாக அமைய வேண்டும். ஏனெனில் எமது கடந்தகால அரசியல் இயங்குநிலையென்பது, தமிழ் சமூகத்தினுள் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாமல் அழிவை அனுபவமாக்கிவிட்டு ஒய்ந்திருக்கிறது.  அவ்வாறாயின் எமது கடந்த காலஇயங்குநிலையில் உள்ள பிரச்சினைதான் என்ன?

அரவிந்தன் அவாவிநின்ற தமிழர் விடுதலை என்பது வெறுமனே நிலங்களை கையகப்படுத்தி, அதன் மீது எல்லையிட்டு, ஆட்சி செய்யும் ஒரு அதிகார பீடமல்ல. அரவிந்தன் போன்றவர்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து விடுபடும் அதேவேளை, தமிழ் சமூகத்தின் மத்தியில் ஆழ வேர்விட்டிருந்த சாதிய ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிய வேண்டுமென்று இயங்கியவர்கள். ஆனால் அதனை தமிழர் விடுதலைப் போராட்டத்தினால் அறுத்தெறிய முடிந்ததா?

இத்தனை இயக்கங்கள் தமிழ் சமூகத்தை உலுப்பி அசைத்திருந்த போதும், பின்னர் 30 வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் சமூகத்தை ஏகபோகமாக தீர்மானித்த போதிலும் கூட, ஏன் இறுதியில் தமிழ் சமூகமானது, எந்த மாற்றங்களையும் பரிசிக்காத காயடிக்கப்பட்ட சமூகமாகவே இருக்கிறது?

தமிழ் இளைஞர்களின் உரிமைப் போராட்டம் இறுதியில் சாதித்ததுதான் என்ன?

தமிழ் சமூகத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளாமல் இயங்கியதன் விளைவா அல்லது, மக்களை வெறும் பார்வையாளராக்கிவிட்டு, இயக்கங்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவா இது?

தமிழ் சமூகத்தில் அனைத்தும் அப்படியே இருக்கிறது ஆனாலும் ஒரு தலைமுறையே தன் உயிரை கொடுத்திருக்கிறது. முன்னாள் போராளிகள், விதவைகள், அங்கவீனர்கள், அனாதரவான சிறுவர்கள், எல்லாவற்றையும் இழந்துவிட்டு கையேந்தி நிற்கும் ஒரு மக்கள் கூட்டம் என்று ஒரு பட்டியலை பிரசவித்து விட்டு, ஈழ வீரமார்த்தாண்ட மரபு முற்றுப்பெற்றிருக்கிறது.

போராட்டங்கள் எதுவும் பிழையல்ல ஆனால் ஆரம்பிக்கப்படும் அனைத்து போராட்டங்களும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டே ஆகவேண்டும். தலைமுறைகள் தோறும் போராடிக் கொண்டிருக்கவே முடியாது. புற நிலைமைகளை விளங்கிக் கொண்டு போராட்டங்கள் நிறுத்தப்படாத போது, அது தொடர்வதை விரும்பாத சக்திகள் அதனை நிறுத்திவிடும். எனவே போராட்டங்களை இன்னொரு தரப்பு நிறுத்துவதற்கு அவகாசம் கொடுக்காமல் அதனை ஆரம்பித்தவர்களே நிறுத்தி விடுவதான் அந்த போராட்டத்தின் உண்மையான வெற்றியாகும். அப்படியான போராட்டங்கள்தான் மக்களுக்கான போராட்டமாக வெற்றிபெறும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தவறல்ல. அது நியாயமான காரணங்களில் வேர்கொண்டிருந்தது. ஆனால், அது நிறுத்தப்பட வேண்டிய தருணத்தில் நிறுத்தப்படாததால், அது மற்றவர்களால் நிறுத்தப்பட்ட போது தமிழர்களுக்கு அழிவே மிச்சமானது.

மிச்சமென்ன சொல்லுங்கப்பா – என்னும் அரவிந்தனின் கேள்விக்கு –அழிவொன்றுதான் மிச்சம் என்பதையே வரலாறு பதிலாக முன்னிறுத்தியிருக்கிறது. அரவிந்தன் போன்ற ஒரு ஆளுமையை நினைவு கொள்வதென்பது, அவரை முன்னிறுத்தி, அவர் அவாவிநின்ற சமூதாய விழுமியங்கள் தொடர்பில் உரையாடுவதாக அமைய வேண்டும் என்பதே எனது புரிதல். அந்த அடிப்படையிலேயே சில விடயங்களை இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

– யதீந்திரா

ஒரு கருத்து “மிச்சமென்ன சொல்லுங்கப்பா? – கி.பி.அரவிந்தனின் இறுதிக்கால கேள்வி – யதீந்திரா”

  1. மனோ says:

    ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஒரு நாடகமா நினைத்த பொழுது தொடக்கவும் நினைத்த பொழுது மணி அடிச்சவுடன் நிறத்தி விடுவதற்கும் ?

    ஆறுமுகநாவலர் காலத்தில் வித்தாக எழுந்த தீப் பொறி. வல்லரசுகளின் சதியும் காட்டிக் கொடுத்த அரசியல் தலைவர்களும் சக விடுதலை அமைப்புகளும் கையில் இருந்த இன விடுதலையை இனப்படு கொலைநடத்தும் அளவுக்கு இனத் துரோகம் செய்யத் துணிந்ததால் நமக்கு நேர்ந்தது இந்தக் கதி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *