ஆண்டொன்று ஆனதே…!
இன்று மார்ச்-08 உலகம் முழுதும் பெண்களைப் போற்றும் நன்னாள் மட்டுமல்ல; ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடி, கவிஞர், எழுத்தாளர், சமூகப் விடுதலைப் போராளி என்று பல பரிமாணங்களைக் கொண்ட, ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவு நாளும் கூட.
2015இல் இதே நாளில் தான் அவரை நாம் இழந்து நிர்க்கதியாய் நின்றோம்.
சோதனைகளின் மத்தியிலெல்லாம் புதினப்பலகையை தன் கையால் தாங்கி நின்றவர். சாய்க்க முயன்ற புயல்களின் மத்தியிலும் சரிந்து போகாமல் தூக்கி நிறுத்தியவர்.
ஆயுதப் போராளியாக ஈழத்தமிழினத்துக்கு அறிமுகமான கி.பி.அரவிந்தன் அவர்களிடம் தமிழர் நலன் – தாயக விடுதலை மட்டுமே உயிர்மூச்சாக இருந்தது.
அவருக்குள் எரிந்து கொண்டிருந்த விடுதலை நெருப்பின் வீரியமே, பின்னாளில் அவரை எழுத்துப் போராளியாக்கியது.
புதினப்பலகை வழியே, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கான இன்னொரு வழியைத் திறந்து விட்டவர் அவர்.
தமிழர் தம் கவனத்தைப் அதிகம் பெற்றிராத- தமிழரின் போராட்டம் மீது தாக்கம் செலுத்தவல்ல புறநிலை விவகாரங்களை, தமிழ் ஊடகப் பரப்புக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை அவருக்கே உரியது.
எமக்கான அரசியலை விட, எம்மைச் சுற்றியுள்ள அரசியலின் பார்வையை, மொழிபெயர்ப்பு கட்டுரைகளின் ஊடே தமிழ் மக்களுக்கு கொண்டு சென்றவர்.
செய்திகளில் நம்பகத்தன்மையையும், ஊடக அறத்தையும் பேணுவதில் ஊடகங்களுக்கு வழிகாட்டியாய்- முன்னோடியாய் இருந்தவர்.
எமையெல்லாம் தாங்கி நின்ற கி.பி.அரவிந்தன் அவர்களின் மரணத்தை மட்டுமல்ல, அது நிகழ்ந்து ஓராண்டு ஆனதையும் தான் நம்ப முடியவில்லை.
எமக்குள்ளே நிலைத்திருக்கும் அவரது இலட்சியமும், அவாவும், தான் எமைத் தொடர்ந்து பயணிக்கும் துணிவைக் கொடுத்திருக்கிறது.
இந்தப் பயணத்தை நிறுத்தாது தொடர்வோம், அவர் நினைவோடு தொடர்வோம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
உன் பாதச்சுவடுகளோடு…..
ஈழ விடுதலைப் போரின்
ஈடிணையிலா ஆணி வேரொன்று
அறுந்து ஆண்டொன்று ஆனதோ
ஆறாத் துயர் கவிந்து…
நேற்றுப் போல் இருக்கிறதே
எமை விட்டு நீர் பிரிந்து….
ஊழிப் பெருந் துயரில்
தமிழரெலாம் வீழ்ந்திருக்க
உணர்வு மட்டும் போதாது
ஊரெல்லாம் விழிப்படைய
சாதிக்கும் வழிகளை நாம்
சான்றோடு முன் வைக்க
புதினப் பலகை யெனும் கூட்டினிலே
ஒன்றிணைத்தீர்…
மானுடம் சுடரும் விடுதலைக்காய்
பயணிக்க எண்ணிய தூரம் அதிகம்..
பாதம் பதித்து பணி தொடங்கி
துயர்மிக்க வாழ்வின் இடர்கள் களைய
இறுதி வரை எம்மோடு வருவீர் என்று
எண்ணிய போதும் ஈர் மூன்றாண்டுக்குள்
இருப்பை விட்டு ஏன் சென்றீர்..?
கொடிய நோயின் கொடுந்துயர்
உன்னை – வாட்டிய போதும்
நிமிர்ந்த நடையுடன் புதினப்பலகையில்
பூபாளம் பாடினாய்.
தெளிந்த நல் ஞான வித்தகன் போல
ஆதவச்சுடராய் அரவிந்தன் நீ
ஊடகப்பரப்பில் உயர்ந்தே நின்றாய்.
இலட்சியமென்பது
எட்டிப்பறித்திடும் மல்லிகையல்ல
ஏறிப்பறித்திடும் மாங்காயும் தேங்காயுமல்ல
எதிர்நீச்சல், எரிமலைமேல் கொடிநாட்டல்
என்றுரைத்து, வசைபாடும் அரசியலில்
அறி-தெளி-துணி என உரமூட்டினாய்.
வில்லில் கணையாய் இருந்து நாங்கள்
இலட்சியப் பயணம் தொடரல் – வேண்டும்
என்றாய் …
நாம் முடிந்து போனாலும் நம்
வருங்காலச் சந்ததிக்காய்
தொடர்வோம்.. என்றாய்.
தொடர்ந்தோம்,
உனைத் தொடர்ந்தோம்…
தொடர்வோம் உனை நினைத்து
தொடர்வோம்….
வேலின் முனையாய்
சொல்லின் செயலாய்,
புதினப்பலகையில்
உன் பாதச் சுவடுகளோடு
தொடர்வோம்……..
– புதினப்பலகை குழுமத்தினர்
(08.03.2016)