மேலும்

சிறிலங்காப் பிரதமரை எதிர்பார்த்திருக்கும் சீனா – வளைத்துப் போடத் தயாராகிறது

malik-sagala-china (1)சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பீஜிங் பயணத்தை சீனத் தலைவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக, சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரம மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான சரியான வாய்ப்பாக, ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரம மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரை கடந்த 01ஆம் நாள் சந்தித்த சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின், சிறிலங்கா பிரதமரின்  பீஜிங் பயணத்தின் போது முக்கியமான விளைவுகளை எதிர்பார்க்க முடியும் என்று உறுதியளித்துள்ளார்.

பீஜிங்கில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா பிரதமரின் பயணம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

malik-sagala-china

ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே 2003ஆம் ஆண்டில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இரண்டாவது தடவையாக அடுத்த மாதம் பீஜிங் செல்லவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை, சீனப் பிரதமர் லீ கெகியாங் வரவேற்று உபசரிப்பார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இருதரப்புப் பேச்சுக்களின் முடிவில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டறிக்கையில், சீனாவின் உதவிகள் தொடர்பான ஒத்துழைப்புகள் பற்றியும், சீனாவின் கடல்வழி பட்டுப்பாதை திட்டம் தொடர்பான வாக்குறுதியும் உள்ளடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், சுற்றுலா குறித்தும்  ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்தின் போது பேச்சு நடத்தப்படும்.

சிறிலங்கா பொருளாதார ரீதியாக பலவீனடைந்துள்ள நிலையில், வேறு வழியின்றி சீனாவின் ஆதரவை சிறிலங்கா பிரதமர் கோரவுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை சீன உதவி வெளிவிவாகார அமைச்சருடன் நடத்திய சந்திப்பின் போது, சீனாவினால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் புதிதான நேரடி முதலீடுகள் குறித்தும் சிறிலங்கா அமைச்சர்கள் பேச்சு நடத்தியுள்ளனர்.

குறிப்பாக தென் மாகாணத்தில் சீனாவின் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

malik-sagala-china (2)

அதேவேளை, அத்துடன் சீனாவின் எக்சிம் வங்கியின் தலைவர் ஹூ சியாவோலியான், சீன அபிவிருத்தி வங்கியின் ஆளுனர் சென் சீஜீ,  ஆகியோரையும் சிறிலங்கா அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதன் போது, பொருளாதார வலயம், கப்பல்களைப் பழுதுபார்க்கும் திட்டம், அம்பாந்தோட்டை விமான நிலைய அபிவிருத்தி திட்டங்களில் சீனாவின் நேரடி முதலீடுகளைப் பெறுவது குறித்தும்,தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கண்டி மற்றும் இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலைகள், மற்றும் கழிவுநீர்த் திட்டங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இவர்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *