மேலும்

எட்காவுக்கும் இந்தியாவின் நோயாளர் காவுவண்டிச் சேவைக்கும் தொடர்பில்லை – ஹர்ஷ டி சில்வா

Harsha-de-Silvaஇந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு உடன்பாட்டுக்கும் (எட்கா), விரைவில் இந்தியாவினால் தொடங்கப்படவுள்ள நோயாளர் காவு வண்டிச் சேவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

சிறிலங்காவில் தனது நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடனேயே இந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்தியா இந்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா-

“இலங்கைத் தீவு முழுவதற்கும் நோயாளர் காவு  வண்டிச் சேவையை ஆரம்பிப்பதற்கு இன்னமும் எந்தவொரு உள்நாட்டு நிறுவனமும் முன்வரவில்லை.

எல்லா தனியார் துறை பங்காளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். உயர்மட்டத்தில் உள்ள 20 நிறுவனங்கள், தலா 10 நோயாளர் காவுவண்டிகளை கொடையாக வழங்க முன்வந்தால் கூட, 200 வண்டிகள் கிடைத்து விடும்.

இந்த திட்டத்தை ஹைதராபாத்தை தளமாக கொண்ட, ஜி.வி.கே. அவசர முகாமைத்துவ ஆராய்ச்சி நிறுவகம் மேற்கொள்வதற்கு இந்தியா 7.6 மில்லியன் டொலரை கொடையாக வழங்குகிறது.

தற்போது சிறிலங்காவில் பணக்காரர்களால் தான் நோயாளர் காவு வண்டிச் சேவைகளை பெற்றுக் கொள்ள முடிகிறது.

பல அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளர் காவு வண்டிகள் இருந்தாலும், அவை பெரும்பாலும் நோயாளிகளைஒரு மருத்துவமனையில் இருந்து இன்னொரு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவே பயன்படுத்தப்படுகின்றன.

பொதுமக்களுக்கு நோயாளர் காவுவண்டி சேவை பொதுமக்களுக்கு இல்லாமை வருத்தத்துக்குரிய விடயம்.

ஜிவிகே முறைமை உலகின் மிகப் பெரிய நோயாளர் காவுவண்டி சேவையாகும். தென் மற்றும் மேல் மாகாணத்தில் முதற்கட்டமாக இந்த நிறுவனம் 88 நோயாளர் காவு வண்டிகளுடன் சேவையை ஆரம்பிக்கும்.

600 இலங்கையர்கள் சாரதிகளாகப் பணியாற்றத் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படும். இந்த திட்டத்துக்கான நான்கு இந்தியர்கள் மட்டும் பணியாற்றுவர்.

தற்போது புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாடு ஒரு ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர் பயனுடையதாக இருந்தால் அதனை நீடிப்புச் செய்ய முடியும்.

இந்த சேவைக்கும் எட்கா உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *