ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் பொதுச்செயலர் விஸ்வ வர்ணபால காலமானார்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் விஸ்வ வர்ணபால இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79 ஆகும்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிலேயே அவர் இன்று காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால 1994 ஆண்டு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அவர் கல்வி உயர்கல்வி அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.
கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து கட்சியின் பொதுச்செயலராக இருந்த சுசில் பிரேம் ஜெயந்த பதவி விலகும் நிலை ஏற்பட்டது.
அப்போது மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினரின் கை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஓங்குவதை தடுப்பதற்காக, பேராசிரியர் விஸ்வ வர்ணபால கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் அந்தக் கட்சியின் பொதுச்செயலராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.