மேலும்

நீண்டநேரம் நடந்த அமெரிக்க – சிறிலங்கா கூட்டு கலந்துரையாடல்

mangala- thomas shannonஅமெரிக்க- சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜோர்ஜ் மார்ஷல் கருத்தரங்க மண்டபத்தில் நேற்று- வெள்ளிக்கிழமை- இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற சிறிலங்கா தரப்புக் குழுவுக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமை தாங்கினார்.

அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அடிநிலைச் செயலர் தோமஸ் சானொன் தலைமை தாங்கினார்.

வொசிங்டன் நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை இந்தப் பேச்சுக்கள் ஆரம்பமாகின. இந்தப் பேச்சுக்கள் மதியபோசனத்துடன் தொடர்ந்து பிற்பகல் வரை- நீண்ட நேரம் இடம்பெற்றன.

mangala- thomas shannon

அமெரிக்கத் தரப்பில் இந்தப் பேச்சுக்களில், தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள்  மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஜனநாயக அரசாட்சி, அபிவிருத்தி  ஒத்துழைப்பு, மக்களுக்கிடையிலான உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, அனைத்துலக மற்றும் பிராந்திய விவகாரங்கள், மேலும் பரஸ்பர ஈடுபாடு கொண்டுள்ள விடயங்கள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை கெளரவிக்கும் வகையில், அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம், இராப்போசன விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

வொசிங்டன் நேரப்படி, வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு- தாயக நேரப்படி, சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் இந்த இராப்போசன விருந்து ஆரம்பமாகியுள்ளது.

இதில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அடிநிலைச் செயலர் தோமஸ் சானொன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள்  மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *