மேலும்

முன்னாள் புலிப் போராளிகளை கண்காணிக்கும் பொறிமுறையை வலுப்படுத்தக் கோருகிறார் கோத்தா

gotabhaya-rajapakseவிடுதலைப் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர்களை கண்காணிப்பதற்கான பொறிமுறையை சிறிலங்கா அரசாங்கம் வலுப்படுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, எஞ்சிய விடுதலைப் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர்களை விடுதலை செய்வதற்கு முன்னர், இந்த கண்காணிப்பு பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“இராணுவப் புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பு வலுப்படுத்தப்படாமல், விடுதலைப் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்படுவதால், நாட்டின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும்.

2009 மே மாதம் போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், 5000 விடுதலைப் புலிகள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், அவர்களின் பின்னணி குறித்தும், விடுதலைப் புலிகளுடனான தொடர்புகள் குறித்தும் நாம் விசாரணை நடத்தினோம்.

அவர்களில், குறைந்தளவு தொடர்புகளை வைத்திருந்தவர்கள், தெரிவு செய்யப்பட்டு, புனர்வாழ்வு அளித்து விடுவிக்கப்பட்டனர்.

2015 ஜனவரியில் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போது,விடுதலைப் புலிகளின் 273 தீவிர செயற்பாட்டாளர்கள்  சிறைகளில் இருந்தனர்.

அவர்களில், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களும், கொழும்பில் பல்வேறு தாக்குதல்களுக்கு சூத்திரதாரிகளாக இருந்தவர்களும் அடங்குவர். இவர்களை விடுவிப்பது பாதுகாப்புக்கு மோசமான அச்சுறுத்தலாகும்.

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவர்கள் அரசியல் கைதிகள் அல்ல, தீவிரவாதிகள்.

இவர்களைக் கைது செய்வதற்கு சிறிலங்கா இராணுவம் மிகப் பெரிய தியாகங்களைச் செய்துள்ளது. இவர்களை எப்படிக் கைது செய்தோம் என்று தெரியாமல், இவர்களை விடுவிக்க வேண்டும் என்று சிலர் இலகுவாக கூறுகின்றனர்.

ஆனால் அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். விடுவிக்கப்பட்ட பின்னர், இவர்களைக் கண்காணிப்பதற்கான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியது முக்கியம்.

இவர்கள் பற்றிய இராணுவப் புலனாய்வு  அமைப்புகளின் சரியான தகவல்களை பெற்று, ஆபத்துக்களை அரசாங்கம் ஆராய வேண்டும்.

இல்லாவிட்டால், இது ஒரு ஆபத்தான முடிவாக இருக்கும். நாட்டின் பாதுகாப்பே அரசாங்கத்தின் மிக உயர்ந்த  முன்னுரிமையான விடயமாக இருக்க வேண்டும்.

2009இல் நாம், விடுதலைப் புலிகளை முற்றுமுழுதாக தோற்கடித்தோம். அந்த அமைப்பின் 12 ஆயிரம் போராளிகள்,  சிறிலங்காவின் அமைதியான குடிமக்களாக இருக்கின்றனர்.

ஆனால் சில தமிழ் அரசியல் வாதிகள், விடுதலைப் புலிகளின் கொள்கையை பரப்புகின்றனர். அதனை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு, சில புலம்பெயர் பிரிவுகள் விரும்புகின்றன. எனவே, விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *