மேலும்

சிறிலங்காவின் சுதந்திர நாள் செய்தியிலும் மகன் கைது குறித்து புலம்பியுள்ள மகிந்த

Mahinda-Rajapaksaசிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் கூட, தனது மகன் கைது செய்யப்பட்டுள்ளது மற்றும் தனது குடும்பத்தினர் பழிவாங்கப்படுவது குறித்தே முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்காவில் வெளிநாட்டுத் தலையீடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது செய்தியில் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்காவை வெளிநாட்டு சக்திகள் தமது தேவைக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளன என்றும், நான்கு பத்தாண்டுகளாக தீவிரவாதத்தின் மூலம் அடைய முடியாது போனதை இந்த வெளிநாட்டு சக்திகள் மூலம் அடையலாம் என்பதே பிரிவினைவாதிகள் நோக்கம் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் இருந்து வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வருகைகள் முடிவில்லாத ஊர்வலமாக நீள்வதாகவும், இந்த வெளிநாட்டு சக்திகள் ஆபத்தான விடுதலைப் புலிகளை விடுவித்தல், ஆயுதப்படையினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்தல், போன்றவற்றில் செல்வாக்குச் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படையினரை போர்க்குற்றங்களுக்காக தண்டிப்பதே இவர்களின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர நாளுக்கு முன்பதாக, எனது அரசாங்கத்தின் உறுப்பினர்களை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ய வேண்டும் என்று வெளிநாட்டு நிதியுதவியில் செயற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள், தற்போதைய அரசாங்கத் தலைவர்களை சந்தித்து கோரியிருந்தன என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தனது மகன் யோசித ராஜபக்ச, தனது ஊடகச்செயலர் ரொகான் வெலிவிட்ட உள்ளிட்டவர்கள், இவ்வாறே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மகிந்த ராஜபக்ச சுதந்திர நாள் செய்தியில் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *