மேலும்

தன் குடும்பத்தினரைத் தண்டிக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார் மகிந்த

mahinda-visit welikadaதன்னை பழிவாங்குவதற்காக, தனது குடும்பத்தை தண்டிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம், வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித ராஜபக்சவை நேற்றுச் சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”எனது குடும்பத்தை முழுமையாக பழிவாங்கும் நோக்கத்தில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. என்னை பழிவாங்க வேண்டும் என்றால் என்னை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதை விடுத்து எனது மகனை சிறையில் வைத்து என்னை தண்டிக்க வேண்டாம்.

நல்லாட்சி பற்றி கதைத்துக் கொண்டு ஆட்சியை கைப்பற்றியவர்கள் இன்று தனிப்பட்ட அராஜக ஆட்சியை நடத்தி வருகின்றனர். எம்மை ஹிட்லர் என வர்ணித்து வந்தவர்கள் இன்று ஹிட்லரை விடவும் மோசமான வகையில் தமது பழிவாங்கல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தவர்கள் இன்று எந்த வகையிலேனும் எனது குடும்பத்தை பழிவாங்க நினைக்கின்றனர்.

எனது மகனை கைது செய்தது என்னை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான்.எனது அரசியல் பயணத்தை முடிவுகட்டவும் எம்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாதொழிக்கவுமே இந்த அரசாங்கம் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது.

குற்றம் செய்திருந்தால் அதற்கான தண்டனை கிடைக்க வேண்டும். அது எனது மகனுக்கு ஒன்றாகவும் ஏனையவர்களுக்கு வேறொன்றாகவும் இருக்கக் கூடாது. ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எம்மை தண்டிக்க முனைவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். நீதிமன்ற சுயாதீனத்தின் மூலமாக எனது மகனுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன்.

எந்த சந்தர்பத்திலும் மக்களின் முழுமையான ஆதரவு எமக்கு அவசியம். மக்களை நம்பியே இன்றும் நாம் செயற்பட்டு வருகிறோம்.

இன்று எனது மகனை தண்டித்ததை போலவே நாளை எனது மனைவியையும் மற்றைய சகோதரர்களையும் கைது செய்வார்கள், என்னையும் கைது செய்வார்கள்.

எனினும் எனது குடும்பத்தை மட்டுமல்ல எனது பரம்பரையே தண்டித்தாலும் கூட எமது பயணத்தை தடுக்க முடியாது. எமது ஜனநாயகப் பயணம் எந்த வழியிலேனும் தொடர்ந்து கொண்டிருக்கும். இந்த அரசாங்கத்துக்கு எதிராக களமிறங்க நாம் தயாராகி விட்டோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *