மேலும்

புதிய அரசியலமைப்பு எந்த சமூகத்துக்கும் முன்னுரிமை வழங்குவதாக அமையக்கூடாது – சுமந்திரன்

sumanthiranபுதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு எந்தவொரு சமூகத்துக்கும் சிறப்பு முன்னுரிமை வழங்குவதாக அமையக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

”1972ஆம் ஆண்டு மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்களில் தமிழ் மக்கள் தள்ளிவைக்கப்பட்டனர். இதனால் இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்பட்டது.

இவற்றை நிவர்த்தி செய்வதிலிருந்து புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரிக்கப்படாத நாடு என்ற அடிப்படை சரியாக உணர்த்தப்படாமையால், சுதந்திரத்தின் பின்னர் இன்று வரை நாடு பல்வேறு வேறுபாடுகளை எதிர்கொண்டுள்ளது.

இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர்கள் இணைந்து, அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டுவரவேண்டும் எனக் செயற்பட்டிருப்பது சிறிலங்காவின் வரலாற்றில் முதல்முறையாகும்.

எமது மக்கள் வேலையில்லாப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை, சமூகப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். நாளாந்தம் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் அவை அவர்களின் அடிப்படைப் பிரச்சினை அல்ல.

சிறுபான்மையாக இருப்பவர்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இதன் மூலமே சகலரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்வார்கள்.

எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்பவர்களுக்கும் சமமான அதிகாரத்தை வழங்கக் கூடிய அரசியலமைப்பு ஒன்றே அவசியமானது.

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு எந்தவொரு சமூகத்துக்கும் சிறப்பு முன்னுரிமை வழங்குவதாக அமையக்கூடாது

தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிங்கள மொழி ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களிடத்தில் சரியாக கொண்டு சேர்த்தால் அவர்களால் அதனைப் புரிந்துகொள்ள முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *