மேலும்

இந்தியாவின் பங்களிப்பின்றி எந்த மாற்றமும் ஏற்படாது – செல்வம் அடைக்கலநாதன்

selvam_adaikalanathanஇன்றைய சூழலில் இந்தியாவின் காத்திரமான தலையீடின்றி எந்தவொரு ஆக்கபூர்வமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதே தமது அமைப்பின் நிலைப்பாடு என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெனிவாவில் இருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை முதன் முதலில் அங்கீகரித்த நாடு என்னும் வகையில் எமது பிரச்சினையில் இந்தியாவின் காத்திரமான தலையீட்டை நாம் எப்போதுமே வரவேற்று வந்திருக்கிறோம், அதே வேளை,இந்தியாவின் வலுவான தலையீடின்றி எமக்கானதொரு நியாயமான அரசியல் தீர்வைப் பெறமுடியாதென்பதையும் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கிறோம். அந்த வகையில் இன்றைய சூழலிலும் இந்தியாவின் காத்திரமான தலையீடின்றி எந்தவொரு ஆக்கபூர்வமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே எமது அமைப்பின் நிலைப்பாடு.

இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்பதும், அவ்வாறு கொல்லப்பட்ட மக்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதிலும் இந்தியா காண்பித்துவரும் கரிசனையை நாம் வரவேற்கிறோம். ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் மீதான இரண்டு பிரேரணைகளுக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்ததன் மூலம்தான், அமெரிக்காவினால் இலங்கையின் மீதான மென் அழுத்தங்களை முன்கொண்டுசெல்ல முடிந்தது.

அவ்வாறு தொடரப்பட்ட அழுத்தங்கள் இன்று ஒரு கட்டத்தை அடைந்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் ஒரு உள்ளக பொறிமுறையின் மூலம்தான் விடயங்களை பாசீலிக்க முடியுமென்று கூறிவருகிறது. ஆனால் எமது மக்களுக்கோ உள்ளக பொறிமுறை ஒன்றில் நம்பிக்கையில்லை. அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக தலைமை என்னும் வகையில் மக்களின் அச்சங்களை, கேள்விகளை புறக்கணித்தும் நாம் செயலாற்ற முடியாது. எனவே எமது மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் இந்தியா காத்திரமானதொரு தலையீட்டை செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்.

இலங்கையின் உடனடி அயல்நாடெனும் வகையிலும், இலங்கையின் உள் விவகாரங்களில் தாக்கங்களை ஏற்படுத்தவல்ல நாடெனும் வகையிலும், இலங்கை ஆட்சியாளர்களின் கபட இராஜதந்திர அணுகுமுறைகள் தொடர்பில் இந்தியா நன்கறியும். கடும்போக்கு வாதத்தை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் சிங்கள ஆட்சியாளர்கள் அனைவருமே, இறுதியில் அந்த கடும்போக்குவாதிகளை சுட்டிக்காட்டியே தமிழ் மக்களுக்கான நீதியை மறுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

சர்வதேச தலையீடு நிகழ்ந்தால், அது கடும்போக்குவாதிகளுக்கு வாய்ப்பாகிவிடும் என்பதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் வாதமாகவும் இருக்கிறது. இதனைத்தான் நாம் கபட ராஜதந்திரம் என்கிறோம். இப்படியான கபட ராஜதந்திரத்திற்கு நாம் தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்க முடியாது. இலங்கையின் மீது ஒரு நீதி விசாரணை அவசியம் என்பதே எமது நிலைப்பாடு. அவ்வாறானதொரு விசாரணை இடம்பெறுவதன் ஊடாகத்தான் இலங்கையின் எதிர்கால சந்ததிகள் நல்லுறுவுடனும் பரபஸ்பர புரிதலுடனும் வாழ முடியும். இது தொடர்பில் இந்தியாவின் உத்தியோக பூர்வ நிலைப்பாடு என்ன என்பதை நாம் அறியாவிட்டாலும் கூட, இடம்பெறவுள்ள நீதி விசாரணைகளில் இந்தியா ஒரு முக்கிய பங்கை வகிக்கவேண்டுமென்று நாம் கோருகிறோம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவிற்குள்ள கவலைகளை நாம் ஒரு போதும் புறக்கணிக்கவில்லை. நாம் ஆயுத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்திலிருந்து பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதிலிருந்து,இந்தியாவின் தேசிய பாதுகாப்புடன் இணைந்ததே எமக்கான விடுதலை என்பதை மிகவும் ஆணித்தரமாக வெளிப்படுத்தி வந்தவர்கள். எனவே இந்தியாவின் நலன்களுக்கு குந்தகமான எந்தவொரு தலையீட்டையும் இந்தியாவிடமிருந்து நாம் எதிர்பார்க்கவில்லை.

நாம் அவ்வாறு எதிர்பார்த்தாலும் கூட அது ஒருபோதும் ஈடேறப்போவதில்லை. நாங்கள் கோருவது ஒன்றே, இந்தியா ஏற்றுக் கொண்ட, எமது தாயகமான இலங்கையின் வடகிழக்கில், எமது மக்கள் தங்களை தாங்களே தீர்மானித்து வாழ்வதற்கு ஏற்றதான ஒரு நியாயமான அரசியல் தீர்வை எங்களது மக்களுக்கு உரித்தாக்க வேண்டும். அதற்காக கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக கையாளுவதற்கு இந்தியா எங்களுடன் இருக்க வேண்டும். இந்தியாவுடன் நாம் இருப்போம்.” என்று அந்த அறிககையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *