மேலும்

சந்திரிகா படுகொலை முயற்சி வழக்கில் இருவருக்கு 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை

chandrika-bombசிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 300 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

1999ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 18ஆம் நாள், கொழும்பில் நடந்த இறுதிக்கட்ட அதிபர் தேர்தல் பரப்புரையின் போது,  சந்திரிகா குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், சந்திரிகா குமாரதுங்கவும் காயமடைந்தார். அவரது ஒரு கண் பார்வையும் பறிபோனது.

இந்தத் தாக்குதலுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு எதிராக, 190 குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், குற்றவாளிகளாக அடையாளம் கண்ட இரண்டு பேருக்கு 290 ஆண்டுகள் மற்றும் 300 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க , மூன்றாவது சந்தேக பெண்ணை  குற்றச்சாட்டில் இருந்து விடுதலைச் செய்தார்.

உதயன் என அழைக்கப்படும் வேலாயுதம் வரதராஜா மற்றும் சந்திரா ஐயர் ரகுபதி சர்மா ஆகியோரே இந்த வழக்கில் குற்றவாளிகளாக  காணப்பட்டுள்ளனர்.

உதயன் என்றழைக்கப்படும் வேலாயுதம் வரதராஜாவுக்கு 290 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், சந்திரா ஐயர் ரகுபதி சர்மாவுக்கு 300 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சந்திரா ஐயர் ரகுபதி சர்மாவின் மனைவியான வசந்தி  ரகுபதி சர்மா இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *