மேலும்

அனைத்துலக தலையீடு இல்லாத விசாரணையை ஏற்கோம் – அமெரிக்காவிடம் சுமந்திரன் தெரிவிப்பு

sumanthiranசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணை அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அமெரிக்கத் தீர்மானம் உள்ளடக்கத் தவறினால், அதற்கு தாம் ஒத்துழைக்கமாட்டோம் என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

நியூயோர்க்கில் நேற்று, ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதித் தூதுவர் மிச்செல் ஜே சிசனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

இதன்போது, “சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக விசாரிக்க, கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறிலங்காவில் நடந்த விடயங்கள் குறித்து அனைத்துலக தரத்திலான விசாரணைகள் இடம்பெறவேண்டும்.

அனைத்துலக நீதிபதிகள், வழக்குதொடுநர்கள், விசாரணையாளர்களைக் கொண்ட பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும். அதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தற்போது அமெரிக்கத் தீர்மான வரைவைப் பலவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் ஆதரவளிக்கின்றன.

எனவே, இவ்வாறான பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை அமெரிக்கா தலையீடு செய்து தடுத்து நிறுத்த வேண்டும்.

அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுநர்களை உள்ளடக்கியதாக, அனைத்துலக தலையீட்டுடனான விசாரணையே முன்னெடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறான விசாரணை நடைபெறாவிடின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஆதரிக்காது, அதில் எந்தப் பங்களிப்பையும் வழங்காது” எனவும் ஐ.நாவுக்கான பிரதி தூதுவர் மிச்சேல் ஜே சிசனிடம், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தாம் உரிய கவனம் செலுத்துவதாகவும் அவ்வாறான அழுத்தங்களை அளிப்பதாகவும், ஐ.நாவுக்கான பிரதி தூதுவர் மிச்சேல் ஜே சிசன், தம்மிடம்  உறுதியளித்ததாகவும், சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *