மேலும்

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவை வரவேற்கிறது கூட்டமைப்பு

tnaசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன்,  நம்பகமான நீதிப் பொறிமுறையை உருவாக்க வலியுறுத்தும் வகையில், ஜெனிவாவில் நேற்று அமெரிக்கா சமர்ப்பித்துள்ள புதிய திருத்த வரைவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் நேற்று மாலை சமர்ப்பிக்கப்பட்ட, திருத்த வரைவு தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து அமெரிக்கா நேற்று தனது தீர்மான வரைவை சமர்ப்பித்துள்ளமை வரவேற்கத்தது.

குறிப்பாக, இந்த வரைவில், அனைத்துலக  சட்டமீறல்கள், குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள் , விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய  நம்பகமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது, வரவேற்கத்தது.

இந்த நீதிமன்ற செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கும், அனைத்துலக தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான பங்களிப்பை வழங்கவுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடு என்ற வகையில் இந்த விடயங்களை கருத்திற் கொண்டு தனது ஒத்துழைப்புக்களை வழங்கி முழு அளவிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும், இந்த தீர்மான வரைவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதன் மூலம், கடந்த காலத்தில் காணப்படும் நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு வியத்தகு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

இந்த வரைவானது பல்வேறு கடினமான நிலைமைகளில் கருத்தொற்றுமை மிக்கதாகவுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கான பொறுப்புக்கூறும் தரப்பினர் என்ற அடிப்படையிலும் அவர்கள் திருப்தி கொள்ளும் வகையில் சொற்றொடர்கள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே இந்த வரைவில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்திற்கான நீண்ட பயணத்தின் ஆரம்பமாக அமையும்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக குரல்கொடுத்து அவர்களின் நம்பிக்கைகளை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து அரசாங்க மற்றும் அரச சார்பற்ற தரப்பினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *