மேலும்

வெளிநாட்டு, கொமன்வெல்த் நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை – தீர்மான வரைவில் மாற்றம்

UNHRCசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன், கூடிய நீதி விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் திருத்தப்பட்ட தீர்மான வரைவை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வலியுறுத்தும், பந்தி உள்ளிட்டதாக, 26 பந்திகளைக் கொண்ட முதலாவது தீர்மான வரைவை கடந்தவாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளிடம் முன்வைத்திருந்தது அமெரிக்கா.

இந்த தீர்மான வரைவு தொடர்பாக கடந்த திங்கள், மற்றும் செவ்வாய்க்கிழமைகளில், நடத்தப்பட்ட முறைசாரா கலந்துரையாடல்களில், 14 பந்திகளை நீக்கவும், மேலும் பல திருத்தங்களைச் செய்யவும் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியது.

அதேவேளை, சிறிலங்காவுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும், தீர்மான வரைவை நீர்த்துப்போக வைக்கும் யோசனைகளை முன்வைத்தன.

இந்த நிலையில், ஜெனிவா நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், திருத்தப்பட்ட தீர்மான வரைவை அமெரிக்கா முன்வைத்துள்ளது.

முன்னர் 26 ஆக இருந்த தீர்மான வரைவின் பந்திகளின் எண்ணிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரைவில், 20 ஆக குறைக்கப்பட்டுள்ளன.

மேலும், அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிகள் விசாரணையாளர்கள், சட்டவாளர்களை உள்ளடக்கிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்க இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, 4ஆவது பந்தியில் கூறப்பட்ட இந்த விடயம், புதிய வரைவில் 6ஆவது பந்தியில் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னைய வரைவில் இருந்த பல விடயங்கள் – சிறிலங்கா அரசாங்கம் மற்றும் ஏனைய நாடுகளின் ஆலோசனையின் பேரில், புதிய வரைவில், இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேவேளை, மேலும் சில பகுதிகள் புதிதாகவும் சேர்க்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *