மேலும்

இந்திய – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் புதுடெல்லியில் ஆரம்பம்

India-srilanka-Flagமூன்றாவது இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையில் புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் குழு இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளது.

மேலும் இந்தக் குழுவில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, கடற்படை பிரதி தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படைத் தளபதியுமான றியர் அட்மிரல் ரொசாரியோ, சிறிலங்கா விமானப்படையின் சார்பில் எயர் வைஸ் மார்ஷல் குருசிங்க, சிறிலங்கா கடலோரக் காவல் திணைக்களத்தின் பணிப்பாளர் றியர் அட்மிரல் விமலதுங்க, புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா பிரதி தூதுவர் லீனகல, வெளிவிவகார அமைச்சின் மூத்த உதவிச்செயலர் சசிகலா பிரேமவர்த்தன, ஆகியோர் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில்,  வழக்கமான விடயங்கள் மற்றும், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல், 2012ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தப் பாதுகாப்புக் கலந்துரையாடலின் ஒரு கட்டமாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சிக்கும், இந்திய பாதுகாப்புச் செயலர் மோகன் குமாருக்கும் இடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

இந்தப் பேச்சுக்களுக்கான சென்றுள்ள சிறிலங்கா பாதுகாப்பு உயர் மட்டக் குழு, புதுடெல்லியில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் பலரையும் சந்தித்துப் பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *