மேலும்

பொறுப்புக்கூறலை நோக்கி நகர்தல் – ஒரு இந்திய ஊடகத்தின் பார்வை

கடந்த காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் என்பது போருக்குப் பின்னான சமூகங்களில் இலகுவாக இடம்பெறக்கூடிய ஒன்றல்ல. எனினும் இதற்கான தேவை மற்றும் அவசியமானது கைவிடப்பட முடியாத ஒன்றாகும்.

பாதிக்கப்பட்ட சமூகத்தவர் மத்தியில் சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாட்டை நிலைநாட்டுவதற்கும், அரசியல் சார் விவகாரங்களுக்கு அரசியல் யாப்பின் ஊடாகத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதென்பதும் பொறுப்புக்கூறலில் மிக முக்கிய பங்குவகிக்கின்றன.

எவ்வாறெனினும், கடந்த காலத்தில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட  மீறல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறிவதில் நிலைமாற்றத்தக்க மற்றும் நிலையான நீதி என்பது தேவைப்படுகிறது.

2009ல் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் போது இதில் பங்குபற்றிய இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட ‘பயங்கரமான மீறல்கள்’ தொடர்பில் சிறிலங்காத் தீவானது பொறுப்புக் கூறவேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரால் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கலப்பு நீதிமன்றின் ஓன்றின் ஊடாக இந்த மீறல்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் இந்த நீதிமன்றில் அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள் ஆகியோர் கடமையாற்ற வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான மீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

சட்ட ரீதியற்ற படுகொலைகள், காணாமற்போதல்கள், திட்டமிட்ட ரீதியில் வைத்தியசாலைகள் மீதான குண்டுத்தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஏனைய மீறல்கள் தொடர்பாக உயர் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை, சிறுவர்கள் மற்றும் இளையோர் பலவந்தமாகப் படையில் இணைக்கப்பட்டமை, போர் வலயத்தில் அகப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்குப் புலிகள் தடைவிதித்தமை போன்ற மீறல்கள் தொடர்பாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘இறுதிக்கட்ட யுத்தத்தில் படிநிலைக் கட்டளைச் சங்கிலிப் பொறிமுறையின் கீழ் குற்றவாளிகள்’ திட்டமிட்ட ரீதியில் மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய தேசிய அரசாங்கமானது மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எவ்வாறான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது என்பதை மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றம் தொடர்பாக சிறிலங்கா தரப்பால் மேற்கொள்ளப்பட்ட உரையில் எந்தவொரு தெளிவான மற்றும் வெளிப்படையான பதில் குறிப்பிடப்படவில்லை. சிறிலங்காப் பிரதிநிதிகள் பேரவையில் தமது நாட்டில் மீளிணக்கப்பாடு மற்றும் வன்முறைகளற்ற அமைதிச் சூழலை நிலைநாட்டுவதற்கான வாக்குறுதியை மட்டுமே வழங்கினர்.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்று நாட்டில் நிலையான சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கான தனித்துவமான வாய்ப்பொன்றை சிறிலங்காவின் தேசிய அரசாங்கம் தற்போது கொண்டுள்ளது.

குறிப்பாக, மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட கலப்பு நீதிமன்றங்களை உருவாக்குவதற்கான சிறப்பு வரைவை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். உண்மையில் இந்த நகர்வானது இலகுவானதாக இருக்காது.

இதனை நடைமுறைப்படுத்தும் போது சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அரசியல் உறுதிப்பாடானது பல்வேறு சோதனைகளுக்கு உட்படும். உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை அல்லாத எந்தவொரு விசாரணைகளையும் ஏற்பதற்கு தயாராக இல்லாத சக்திகள் இதனை எதிர்ப்பதற்கு முயலலாம்.

சிறிலங்காவின் இந்த முயற்சியை இந்தியா நன்கு உற்று நோக்கும். இவ்வாறானதொரு நாடுகடந்த-தேசிய கலப்பு விசாரணையானது தென்னாசியப் பிராந்தியத்திற்கு  புதிய ஒரு விடயமாகும். எவ்வாறெனினும், சிறிலங்காவின் போர் மற்றும் சமாதானம் ஆகிய இரண்டிற்கும் பல்வேறு அனைத்துலக நாடுகள் தமது ஆதரவை வழங்கின என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.

கலப்பு நீதிமன்றம் என்கின்ற புதிய பொறிமுறையானது அனைத்துலக விசாரணை மட்டுமே சாத்தியம் என்பதை வலியுறுத்தும் ஒரு சாராருக்கும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது என வாதிடும் மறுசாராருக்கும் இடையில் அவசியமான சமவலுவை நிலைநாட்டுவதில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

தென்னாசியாவின் மிக நீண்டகால யுத்தம் எனக் கூறப்படும் சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான தக்க தருணம் இதுவாகும்.

வழிமூலம் – The Indian Panorama ( ஆசிரியர் தலையங்கம்)
மொழியாக்கம் – நித்தியபாரதி

ஒரு கருத்து “பொறுப்புக்கூறலை நோக்கி நகர்தல் – ஒரு இந்திய ஊடகத்தின் பார்வை”

  1. rk says:

    எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன … அமெரிக்க விஜயத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவுடனும் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இறுதி கட்ட போர் க்கு பின்னர் ஒரு தமிழ் நெஞ்சம் கூட தனி ஈழம் பற்றி யோசிகவீல்லையா? ஐயா பாலசிங்கம் அவர்களும் மற்றும் தமிழ்ச்செல்வன் ஐயா அவர்களும் விட்டு சென்ற அரசியல் ரீதியான அழுத்தத்தை கொடுக்க யாரும் முன்வரைள்ளய்யே. என் ஐ.நா அறிக்கை, ஐ.நா விசாரணை பற்றி கவலை பட்டு கொண்டு நேரத்தை வீணடிக்கிறோம்? நாம் நமது குரிகொலேளிருந்து விட்டு விலகி செல்ல காரணம் என்ன? ஒரு தமிழனுக்கும் துணிவில்லையா என்ன? இதற்கு முதற்படியாக நாம் எல்லோரும் சேர்ந்து இன்று முதல் 30 ஆம் திகதி வரை ஈழம் நேரம் இறவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒபாமா அவர்கள் மைத்திரிபால சிரிசேன விடம் தனி ஈழம் கொடுப்பதை பற்றீ வலிவுருத்த வேண்டும் என்று கூட்டூ தவம் மற்றும் கூட்டூ பிரார்த்தனை (எந்த கடவுள் ஆனாலும் சரி) செய்வோம். தவம் தெரியாதவர்கள் மற்றும்பிரர்தனைஇல் நம்பிக்கை இல்லாதவர்களும் மனதில் ஆலமாகா யோசித்தால் போதும். வேலை பளு அதிகம் உள்ளவர்கள், அவர்கள் வசதி கேற்ப தவம் மற்றும் பிரார்த்தனை யில் ஈடுபடலாம். இது துவக்கம் மட்டுமே…. இன்னும் ஒரு பாலசிங்கம், ஒரு தமிழ்ச்செல்வன் உருவாக வேண்டும் உருவாக வேண்டும், நமக்கு தனி ஈழம் பெற்று தர வேண்டும்..
    நம்பிக்கையோடு
    ஆர் கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *