மேலும்

கடுமையான நிபந்தனையுடன் சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கை

UNHRCஐ.நா விசாரணை அறிக்கையின் உள்ளடக்கம் எக்காரணம் கொண்டும் வெளியே கசியவிடப்படக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிக்கையின் முற்பிரதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கையளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையின் பிரதி சிறிலங்கா அரசாங்கத்திடம் கடந்த வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கை வெளிவிவகார அமைச்சு மூலம் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா பிரதிநிதிகளும், கொழும்பிலுள்ள அதிகாரிகளும், ஆராய்ந்து வருகின்றனர்.

எனினும், இந்த அறிக்கை தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கமும், ஐ.நாவும் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றன.

அறிக்கையின் உள்ளடக்கம், கண்டறிவுகள், பரிந்துரைகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியில் கசியவில்லை.

அதிகாரபூர்வமாக இந்த அறிக்கையைத் தாம் வெளியிடுவதற்கு முன்னர், வெளியே கசிவதை ஐ.நா விரும்பவில்லை என்றும், அதனால், உள்ளடக்கம் பற்றிய எந்த தகவலும் வெளிவரக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே சிறிலங்கா அரசாங்கத்திடம், அறிக்கையின் பிரதி கையளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த அறிக்கை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவளிக்கும் தீர்மான வரைவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைப்பது தொடர்பாக, அனைத்துலக சமூகத்துடன் கலந்துரையாடும் முதலாவது உப மாநாட்டை அமெரிக்கா வரும் 17ஆம் நாள் ஜெனிவாவில் நடத்தவுள்ளது.

அதற்கு முன்னதாக, ஐ.நா விசாரணை அறிக்கை அதிகாரபூர்வமாக இணையத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இன்றைய ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *