மேலும்

ஜெனிவா நெருக்கடியில் இருந்து தப்பிக்க இரு அறிக்கைகளைப் பகிரங்கப்படுத்துகிறது சிறிலங்கா

sri-lanka-emblemஜெனிவா நெருக்கடியைச் சமாளிக்க, சிறிலங்கா அரசாங்கம் இரண்டு உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் இந்தமாதம் சமர்ப்பிக்கவுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பாக விசாரணைகளை நடத்திய மக்ஸ்வல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையும், 2006ஆம் ஆண்டில் மூதூரில் அனைத்துலக தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை, திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை உள்ளிட்ட மீறல்கள் குறித்து விசாரித்த உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையுமே, அவசரமாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிடப்படவுள்ளது.

காணாமற்போனோர் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம, தமது இடைக்கால அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா அதிபரிடம் கையளித்திருந்தார்.

இந்த இடைக்கால அறிக்கையில் அனைத்துலக மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், 2006ஆம் ஆண்டு மூதூரில் அக்சன் பெய்ம் அமைப்பின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட, நிசங்க உடலகம தலைமையிலான 8 பேர் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த விசாரணைக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாத அதேவேளை, சட்டமா அதிபரின் நடவடிக்கைக்காக 2007 ஆம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று அனைத்துலக சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் அது பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த இரண்டு அறிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்துவதன் மூலம், அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கையைப் பெறும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *