மேலும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – ஜெனிவா மீது குவியும் கவனம்

UNHRC-meeting-roomஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு இன்று தொடக்கம் அடுத்த மாதம் 2ஆம் நாள் வரை- மூன்று வாரங்கள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் முக்கியமாக, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

இன்றைய முதல் நாள் அமர்வில், சிறிலங்கா வெளி்விவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், மற்றும் மெக்சிகோவின் உள்நாட்டு அமைச்சின் மனித உரிமைகளுக்கான அடிநிலைச்செயலர்  ரொபேட்டோ கம்பா ஆகியோர்  முக்கிய அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தமது உரையில், குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டு விசாரணை நடத்துவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா தொடர்பான விவாதம் வரும் 30ஆம் நாளே நடைபெறவுள்ளது.

இதன் போது, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிகாரபூர்வமாக சிறிலங்கா பற்றிய விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து, இதுதொடர்பான தமது பரிந்துரைகளையும் முன்வைப்பார்.

அதன் போது, அமெரிக்கா தரப்பில் சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவான தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, உலகிலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *