மேலும்

இருதரப்பையும் கடுமையாக சாடும் ஐ.நா அறிக்கை – எவரையும் போர்க்குற்றவாளிகளாக பெயரிடவில்லை

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், எவரது பெயரும் அதில் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஐ.நா விசாரணை அறிக்கையின் முற்பிரதி நேற்றுமுன்தினம் சிறிலங்கா அரசாங்கத்திடம் வழங்கப்பட்டது.

இந்த அறிக்கை ஐ.நா இணையத்தளத்தில் அடுத்தவாரம் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம். அதுவரை இது மிகவும் இரகசியமாக வைக்கப்படவுள்ளது.

அதேவேளை, இந்த அறிக்கையில், சிறிலங்கா அரச தரப்பு மற்றும் விடுதலைப் புலிகள் மீது விசாரணைக் குழு போர்க்குற்றங்கள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கையில் எந்த அரசியல்வாதிகளினதோ அல்லது போரில் பங்கெடுத்தவர்களினதோ பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

எங்கு மீறல்கள் இடம்பெற்றது என்ற பரப்பை வைத்து, கண்டுபிடிப்புகளின் அடிப்படையில்  கட்டளைச் சங்கிலியை அடையாளம் கண்டு, அதில் தொடர்புடையவர்களை  அடையாளம் காண்பது கடினமல்ல என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு, திட்டமிட்ட அடிப்படையில் உணவு, மருந்துப் பொருட்களை வழங்க மறுத்ததாக முன்னைய அரசாங்கம் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கையால் மூன்றரை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னி அரசாங்க அதிபரின் அறிக்கைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *