மேலும்

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்டுமா?

missingகடந்த சில ஆண்டுகளாக சிறிலங்கா மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பல நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. ஆனாலும் தற்போது சிறிசேனவின் உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்குவதென அமெரிக்கா அறிவித்ததானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது.

இவ்வாறு லண்டனில் இருந்து வெளியாகும் Financial Times நாளிதழில் James Crabtree என்ற ஊடகவியலாளர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் கொடூரம் மிக்க இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் தனது குடும்பத்தினர் சரணடைந்து 24 மணிநேரத்தின் பின்னரே, இறுதியாக தனது கணவரைக் கண்டதாக இரு கண்களிலும் நீர் நிரம்பியவாறு முருகதாஸ் கஜேந்தினி கூறினார்.

சிறிலங்காவின் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த மே 18, 2009 அன்றே தனது கணவரை இறுதியாகப் பார்த்ததாகவும் அதன் பின்னர் இன்று வரை இவர் தொடர்பான எவ்வித தகவல்களும் தனக்குத் தெரியாது எனவும் கஜேந்தினி கூறுகிறார்.

சிறிலங்காவின் வடக்கிலுள்ள யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் இருந்தவாறு கஜேந்தினி தனது கணவர் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தனது கணவர் விசாரணைக்காக இராணுவப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவர் தெரிவித்தார்.

தனது கணவர் யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் ஒரு கையை இழந்திருந்ததாகவும் அவர் தன்னை விட்டுப்  பிரிந்த அந்த நாளில் ஒற்றைக் கையுடன் சென்றது இன்றும் நினைவிருப்பதாகவும் கஜேந்தினி தெரிவித்தார்.

‘எனது கணவர் இராணுவத்தால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதை நான் எனது கண்களால் பார்த்தேன். அவர்கள் அவரது பெயரைக் கூப்பிட்டு அழைத்துச் சென்றனர். இவர் தற்போதும் உயிருடனிருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை நான் அறியவேண்டும்’ என்கிறார் கஜேந்தினி.

சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் போர்க் காலத்தில் நாட்டின் தலைவராகவும் செயற்பட்ட மகிந்த ராஜபக்ச நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமையானது காணாமற்போனவர்கள் தொடர்பில் நீதியை எட்டித்தரும் என நம்புகின்ற,  ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுள் கஜேந்தினியும் ஒருவர்.

தனது பத்தாண்டு கால ஆட்சியின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு  ராஜபக்ச தடையாக இருந்தார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கண்டனங்களை முன்வைத்தனர்.

இறுதியாக சிறிலங்காவிற்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என மேற்குலக நாடுகள் வலியுறுத்தத் தொடங்கின. தற்போது மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியுற்றுள்ள நிலையில் தமக்கு நீதி கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

‘தற்போது நாட்டில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்புக் காணப்படுகிறது. ஆனால் இந்த வாய்ப்பு மீண்டும் ஒருபோதும் வராது. ஆகவே இதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். என்ன செய்ய நினைத்தாலும் அதனை இப்போது மிகச் சரியாகச் செய்யவேண்டும். காலதாமதமின்றிய நடவடிக்கை மிகவும் முக்கியமானதாகும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் மதியாபரணம் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இம்மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் சபையின்  கூட்டத்தொடரில் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக அறிக்கை வெளியிடப்படவுள்ளது. மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இடம்பெற்ற மீறல்கள்,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் அரசியல் ரீதியான சிக்கல்களை எதிர்கொள்வதற்கு வழிவகுத்துள்ளது.

வடகொரியாவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பாக 2014ல் வரையப்பட்ட ஐ.நா அறிக்கையானது சிறிலங்காவின் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஆகவே தற்போது சிறிலங்காவின் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய கடப்பாடு புதிய அரசாங்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தான் ஏற்கனவே போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கியதாக சிறிசேனவின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐ.நா அறிக்கை இம்மாதம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில் இது சிறிலங்காவிலும் வெளிநாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில் காணாமற் போனவர்களின் விபரங்கள் மற்றும் போர்க் கால மிகக் கொடூரமான மீறல்கள் போன்றன பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்கா மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பல நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. ஆனாலும் தற்போது சிறிசேனவின் உள்ளக விசாரணைக்கு ஆதரவு வழங்குவதென அமெரிக்கா அறிவித்ததானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. அனைத்துலக ஆலோசகர்களின் பங்களிப்புடன் உள்ளக விசாரணையை மேற்கொள்வதென சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த விசாரணை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்டது போன்று உண்மை மற்றும் மீளிணக்கப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இது தொடர்பில் பல்வேறு வினாக்கள் முன்வைக்கப்படுகின்றன.

‘விசாரணைகள் இடம்பெறுமா? இதில் நீதிபதிகள் உள்ளடக்கப்படுவார்களா? இதில் சிறப்பு வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்களா? இவை தொடர்பாக எவ்வித தெளிவான பதில்களும் முன்வைக்கப்படவில்லை’ என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தைச் சேர்ந்த பாக்கியசோதி சரவணமுத்து கூறுகிறார்.

இத்தீர்மானங்கள் அனைத்தும் அரசியல் ரீதியாக ஆபத்து நிறைந்தனவாகும். போர்க் காலத்தில் எவ்வாறு கட்டளைச் சங்கிலி செயற்பட்டது என்பதை கொழும்பிலுள்ள தலைவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் போர்க் கதாநாயகன் என பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் போற்றப்படும் ராஜபக்ச வேறு பலரால் போர்க் குற்றவாளி எனவும் கூறப்படுகிறார்.

சிறிலங்காப் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பொறுப்புக் கூறலுக்குள் உள்ளடக்கப்பட வேண்டும். சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவளிப்பதாக கடந்த மாதம் கொழும்பில் வைத்து அமெரிக்கப் பிரதி இராஜாங்கச் செயலர் ரொம் மலினோவ்ஸ்கி தெரிவித்திருந்தார்.

‘இந்த விசாரணை நடவடிக்கையானது நிறைவு பெறுவதற்கான இன்னமும் காலம் எடுக்கும் என்பதை நான் அடையாளங் கொண்டுள்ளோம். எவரும் அதிசயங்களை எதிர்பார்க்கவில்லை’  என ரொம் மலினோவ்ஸ்கி மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனாலும் சிறிலங்காவில் காணாமற் போனவர்களின் உறவுகள் இன்னமும் தமக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.

கஜேந்தினி காணாமற்போன தனது கணவரின் ஒளிப்படத்தைக் கையில் ஏந்தியவாறு தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். இந்த ஒளிப்படம் அவரது மகனின் இரண்டாவது பிறந்த நாளின் போது எடுக்கப்பட்டதாகும். தற்போது பத்து வயதாகியுள்ள கஜேந்தினியின் மகன், காணாமற் போனவர்கள் தொடர்பில் எவ்வாறான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என கஜேந்தினி விளக்கமளித்த வேளையில் அவருக்கருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.

‘எனக்கு அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை. ஏனைய நாடுகள் எம்போன்றவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். காணாமற் போன எனது கணவரையும் அவர் போன்ற ஏனையவர்களையும் கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் உதவும் என நான் நம்புகிறேன். எனது கணவர் தற்போதும் உயிருடனுள்ளார் என நான் நம்பிக்கை கொள்ள வேண்டியுள்ளது’ என கஜேந்தினி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *