மேலும்

சனல்-4 காணாளி குறித்த சிறிலங்கா இராணுவத்தின் விசாரணை தீவிரம்

warcrimeஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடங்குவதற்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில், சனல்-4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படத்தில் காணப்படும் படையினரை அடையாளம் காணும் விசாரணைகளை சிறிலங்கா இராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கென புதிய இராணுவ விசாரணை நீதிமன்றம் ஒன்று நியமிக்கப்பட்டு, கொழும்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள தனியான இடமொன்றில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் உத்தரவின் பேரில் அவரது நேரடிக் கவனிப்பின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சனல்-4 காணொளியில் இருப்பவர்கள் சிறிலங்கா படையினரா? அவர்கள் சிறிலங்கா படையினராயின், எந்தப் படைப்பி்ரிவைச் சேர்ந்தவர்கள்? எங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பன போன் விபரங்களைத் திரட்டவே இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்ற விசாரணைக் குழுவில், பிரிகேடியர்களான ஜயந்த குணரத்ன, சுமித் அத்தப்பத்து ஆகியோர் அடங்கியுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணைக் குழு போரின் இறுதிக்கட்டத்தில் படைப்பிரிவுகளுக்குத் தலைமை தாங்கிய இராணுவக் கட்டளை அதிகாரிகளை அடுத்த சில நாட்களில் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *