மேலும்

போரின் இறுதியில் ஆட்டிலறிகளைப் பயன்படுத்தியது உண்மை – ஒப்புக்கொண்டார் சரத் பொன்சேகா

field-marshan-sarath-fonseka (1)போரின் இறுதிக்கட்டத்தில் இழப்புக்களைத் தவிர்ப்பதற்கு, சிறிலங்காப் படையினர்  ஆட்டிலறிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

இந்தியாவின் அழுத்தங்களின் பேரில் போரின் இறுதிக்கட்டத்தில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா இராணுவமும், அரசாங்கமும் கூறிவந்த நிலையில், போருக்குத் தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஆட்டிலறிகள், மோட்டார்களைப் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தச் செவ்வியின் முக்கியமான பகுதிகள்-

கேள்வி – வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசபடைகளால் கொல்லப்படவில்லை எனவும், அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், கருணா கூறியுள்ளாரே, உங்களின் கருத்து என்ன?

பதில் – கருணா இப்போது தமிழர்களின் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தாம் ஈடுபடவில்லை என்று அவர் கூறியிருப்பதை வாசித்திருந்தால் அது தெளிவாகும். கருணா கொழும்பில் உள்ள பாதுகாப்பு இடம் ஒன்றில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருந்தார். அவருக்கு வெளியுலகத் தொடர்புகள் இருக்கவில்லை. ஒரு தொலைபேசித் தொடர்பை எடுக்கும் வசதிகளும் கூட இருந்திருக்கவில்லை.  எனவே அவருக்கு போர் முனையில் என்ன நடந்தது என்று தெரியாது.

கேள்வி – அவர் எந்த தகவலாவது வழங்கினாரா?

பதில் – எமக்கு வழங்குவதற்கு கருணாவிடம் பயனுள்ள தகவல்கள் இருக்கவில்லை. பிரபாகரனின் இளைய மகன் சரணடைந்தார் என்றும் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் கூறியுள்ளார். பிரபாகரனின் மகன் சரணடையவில்லை. இராணுவத்தினர் அவரைக் கைது செய்யவுமில்லை. அவரது இளைய மகன் பற்றிய தகவல்களை எமக்கு கிடைத்திருக்கவில்லை. பின்னர் நாம் அவரது குண்டு துளைத்த உடலை கண்டோம். எப்படி நடந்தது என்றோ, எங்கு நடந்தது என்றோ எமக்குத் தெரியாது.

இராணுவத்தினர் பீரங்கித் தாக்குதலில் பிரபாகரனின் மனைவியும் மகளும் மரணமானதாக கேபி தெரிவித்திருந்தார். பிரபாகரனின் மகள் ஒரு முன்னணி போராளி. பெண்கள் அணியில் அவர் லெப்.கேணலாக இருந்தவர். அவரது மனைவியும் கூட முன்னரங்கிற்கான விநியோகங்களில் தொடர்புபட்டிருந்தவர். அவர் முன்னரங்க நிலைகளில் பணியாற்றியிருந்தார். அவர்கள் முன்னரங்க நிலைகளில் கொல்லப்பட்டிருக்கலாம். அது தான் சாத்தியம்.

கேள்வி- பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று எப்படிக் கூறுகிறீர்கள்?

பதில் – அவரது தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவரது மண்டையோட்டின் முன்பகுதி பிளந்திருந்தது. அவர் கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டிருந்தால், இவ்வாறு நடந்திருக்காது. அவ்வாறு நடந்திருந்தால், ரவை நுழைந்த இடத்தில் சிறியதொரு துவாரம் ஏற்பட்டிருக்கும், அது வெளியேறிய பின்பகுதியில் கொஞ்சம் பெரிய துவாரம் ஏற்பட்டிருக்கும்.

தற்கொலை செய்வதற்கு, துப்பாக்கி ஒன்றையோ, பெரிய துப்பாக்கி ஒன்றையோ பயன்படுத்தியிருந்தால், அது பெரிதாக இருக்கும் என்பதால், கன்னத்தின் கீழ் தான் சுட்டிருக்க முடியும். பெரிய ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டதால் தான், மண்டையோட்டின் ஒரு பகுதி சிதைந்திருந்தது. எனவே தான் அது மோட்டார் குண்டு ஒன்றின் சிதறலாகவோ, ஆட்டிலறி ஒன்றின் உலோகத் துண்டாகவோ இருக்கலாம்.

போரின் இறுதிக் கட்டத்தில், அவர் நந்திக்கடலுக்கு வடக்கே உள்ள சதுப்பு நிலக்காடுகளுக்குள் நின்று சண்டையிட்டார். பிரபாகரனுடன் 35 பேர் இருந்தனர். அந்தக்கட்டத்தில் எமக்கும் பெரியளவில் இழப்புகள் ஏற்பட்டன. இழப்புகளை தவிர்க்க நாம், மோட்டார்களையும் ஆட்டிலறிகளையும் பயன்படுத்தினோம்.

கேள்வி- அவரது மரணத்துக்கும், உடல் கண்டெடுக்கப்பட்டதற்குமான கால இடைவெளி என்ன?

பதில் – இறுதிச்சமர் மே 17ஆம் நாள் அதிகாலை 2.30 மணியளவில் ஆரம்பமானது.  அது மூன்று வெவ்வேறு இடங்களில் தொடர்ந்தது. எமது பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து, காட்டுக்குள் நுழைவதற்கு சாத்தியமான இரண்டு இடங்களில், மிக கடுமையான சண்டை இடம்பெற்றது. இராணுவத்தினர் ஒரு இடத்தை மே 18ஆம் நாள் காலை 10.30 மணியளவில்  துப்புரவு செய்தனர். அதேநாள் பிற்பகல் 1.30 மணியளவில் மற்றொரு இடத்தை துப்புரவு செய்தனர்.

சதுப்பு நிலப் பகுதியில், சிறிய சிறிய குழுக்களாக நின்று விடுதலைப் புலிகள் எதிர்த்துச் சண்டையிட்டனர். இந்தச் சண்டை, மே 18ஆம் நாள் இரவும் நீடித்து, மே 19 காலை வரை தொடர்ந்தது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வெற்றியை விரைவாக கொண்டாட முனைந்தார். மே 18ஆம் நாள் அவர் அலரி மாளிகையில் கேக் வெட்டினார்.  அவர் மே 19ஆம் நாள் காலையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ஆனால் அப்போதும் கூட படையினர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். நாம் நிலத்தை விடுவித்திருந்தாலும், சண்டை நடந்து கொண்டிருந்தது.

கேள்வி – பிரபாகரன் எப்போது இறந்தார்?

பதில் – நான் நாடாளுமன்றத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, எனக்கு காலை 11 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. சண்டை காலை 10.30 மணிக்கே முடிவுக்கு வந்தது. அது பெரியதொரு சதுப்பு நிலப்பகுதி. சிறுகாடுகள் நிறைந்த அந்தப் பகுதியில் இருந்து ஏனைய சடலங்களை மீட்க நீண்ட நேரம் சென்றது.

கேள்வி – பிரபாகரனின் உடலுக்கு என்ன நடந்தது?

பதில் – நடைமுறைகளுக்கு ஏற்ப, காவல்துறை வந்து. எல்லாவற்றையும் பதிவு செய்தது. மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது மூத்த மகனின் உடலும் கண்டெடுக்கப்பட்டிருந்தது. கருணாவும் அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவர் உடனடியாகவே சடலத்தை அடையாளம் காட்டினார். அதன் பின்னர், சடலத்தை அழிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் உடலை எவரும், உரிமை கோரவில்லை.

கேள்வி – உடல் எரிக்கப்பட்டதா, புதைக்கப்பட்டதா?

பதில் – அது எரிக்கப்பட்டது.

கேள்வி – அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று எவ்வாறு உறுதி செய்ய முடியும்?

பதில் – சண்டை முடிந்து அரை மணிநேரத்துக்குள், நாம் இறுதியான தேடுதலை நடத்திய போது, பெருமளவு உடல்களை கண்டெடுத்தோம்.அதில் அவரும் இருந்தார். காயத்தின் தன்மையைக் கொண்டு, அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூற முடியும். நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றால், தலையின் ஒரு பாகத்தை் இழக்க வேண்டிய தேவையில்லை.

கேள்வி – அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா?

பதில் – அதற்கான தேவை இருக்கவில்லை.  போர் முனையில், பலவேறு வழிகளில் மரணங்கள் ஏற்பட்டிருக்கும். காவல்துறை வந்து. வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், உடல் அழிக்கப்பட்டது.

கேள்வி – விடுதலைப் புலிகளின் இராணுவத் தோல்விக்கு தனது பிரிவு  பெரியதொரு காரணம் என்று கருணா கூறியுள்ளாரே?

பதில் – இது எவ்வாறு நடந்தது. பிரபாகரன் அவரது நிதி முறைகேடுகளை கண்டுபிடித்தார். முல்லைத்தீவு வந்து அது பற்றி அறிக்கை தருமாறு கேட்டார் பிரபாகரன். அதன் அர்த்தம் அவருக்குத் தெரியும். அதனால் அங்கு போகவில்லை. அவர் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தார். அவருடன் சில போராளிகளே வெளியேறினர். பிள்ளையான் மற்றும் சுமார் 200 போராளிகள், அவர்களில் பலர் சிறுவர்களாக இருந்தனர்.

அவர்கள் எமது நிலைகளுக்குப் பின்புறமாக- சோமாவதி சைத்தியவுக்கு நெருக்கமாக உள்ள சுங்கவில் பகுதியில் உள்ள சிறிய காட்டில் தஞ்சமடைந்தனர். நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  கருணா கொழும்பில் மறைந்திருந்தார். கொழும்பில் பாதுகாப்பான இடமொன்றில் அவரது போராளிகள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். இவையனைத்தும்,  நான் இராணுவத் தளபதியாவதற்கு முன்னர் நடந்தவை. நான் பதவியேற்ற பின்னர், அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நான் பதவியேற்ற போது அவர் கொழும்பில் ஒரு பாதுகாப்பு இடத்தில் இருந்தார்.

கேள்வி – எவர் எந்த தகவலையும் வழங்கவில்லையா?

பதில் – அவர் எந்த தகவலையும் வழங்கவில்லை. உண்மையில் எனது பணியகத்தில் அவர் சில தடவைகள் என்னைச் சந்தித்துள்ளேன். அவரிடம் இருந்து நாம், பிரபாகரனின் மறைவிடம், கனரக ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள  சரியான இடங்கள் போன்ற தகவல்களையே அவரிடம் இருந்து எதிர்பார்த்தோம். ஆனால் அதுபற்றி அவர் எதையும் கூறவில்லை. புதுக்குடியிருப்பைக் கைப்பற்றிய பின்னர் தான், பிரபாகரன் எங்கு மறைந்திருந்தார் என்பதைக் கண்டுபிடிக்க எம்மால் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *