மேலும்

முதல் உரையிலேயே அரசாங்கத்தை சாடிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

R.sampanthanசிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று நியமிக்கப்பட்ட இரா.சம்பந்தன், தனது முதல் உரையிலேயே,  அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி. அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கையை, 48 ஆகவும், பிரதிஅமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆகவும் அதிகரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியை அவர் கோரியிருந்தார்.

இது தொடர்பான விவாதம் இடம்பெற்ற போது, உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்,

“தேசிய நலன் என்று அரசாங்கம் கொண்டு வரும் தவறான சட்டத் திட்டங்களை எதிர்ப்போம்.

தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு என்ற திட்டம் கொள்கை ரீதியாக சிறந்த முன்உதாரணம் அல்ல.

கடந்த காலங்களில், அமைச்சரவை கணக்கின்றி அதிகரித்துச் சென்றது போன்ற அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்க கூடாது.

இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நிலையில் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30ற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இணை மற்றும் துணை அமைச்சர்கள், என மொத்தம் 70 பேர் தான் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்கா தமது அயல்நாடான இந்தியாவை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றில் புதிய இளம் தலைவர்கள் உள்ளனர். மாகாண சபையில் முதலமைச்சர் பதவி வகித்தவர்களும் உள்ளனர். அவர்களுக்கு ஏன் பிராந்திய அதிகாரத்தை அதிகரிக்கக் கூடாது?

மாகாணங்களுக்கு அதிகாரங்களை அதிகரித்தால், மக்கள் மத்தியில் அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியும்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எமது கடமை. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *