மேலும்

சீனாவை சிறிலங்காவிடம் இருந்து ஓரம்கட்ட முடியுமா?

port-cityஇந்தியா தனது நலன்களை பராமரித்துக் கொள்வதுடன் கொழும்புடன் தொடர்ந்தும் உறவைப் பேணுவதையும் இதன் மீது தான் செல்வாக்குச் செலுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் அதேவேளையில், சீனாவிடமிருந்து சிறிலங்காவை ஓரங்கட்டுவதில் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

இவ்வாறு thewire ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் ராகுல் சர்மா. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்கா தலைநகரில் உள்ள பிரபலமான, காலி முகத்திடலில் உள்ள இரு பீரங்கிகள் இப்போது இந்திய மாக்கடலைக் கண்காணிக்கவில்லை.  சீனாவினால் நிதியிடப்பட்ட- கடலுக்கு மேலாக, வானுயர்ந்த கட்டடங்களைக் கொண்டதாக புதிய நிலத்தை உருவாக்கும்1.4 பில்லியன்  செலவில் உருவாக்கப்படும் நகரத் திட்டத்துக்காக கொட்டப்பட்டுள்ள மணல் மற்றும் சிறுகற்களை அவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

தற்போது நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் மூலம் சீனாவை சிறிலங்காவில் நிலைநிறுத்திய மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறக்கூடாது என்பதை உறுதிப்படுத்தி மக்கள் தமது ஆணையை வழங்கியுள்ளனர்.

சிறிலங்காவில் முன்னர் மிகவும் அதிகாரம் மிக்க அதிபராக விளங்கிய ராஜபக்ச நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாட்டின் பிரதமராக வரவேண்டும் என விரும்பிய போதிலும் அதில் அவர் தோல்வியுற்றுள்ளார்.

ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் இவர் தோல்வியுற்று நல்லதொரு பாடத்தைக் கற்றபோதிலும் மீண்டும் பிரதமராவதற்கான தேர்தலிலும் தோல்வியுற்றுள்ளார்.

சிறிலங்காவை யுத்தத்திலிருந்து காப்பாற்றி நாட்டில் அமைதி மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்திய கடவுள் போல் போற்றப்பட்ட ராஜபக்ச சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணியதானது சிறிலங்காவின் அயல்நாடான இந்தியாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதானது இந்தியாவின் பூகோள அரசியல் வெற்றிடத்தை இட்டு நிரப்புவதற்கான ஒரு வெற்றியாகவே நோக்கப்பட்டது.

தற்போது மகிந்த ராஜபக்ச மீண்டும் பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதானது இவரது சீனாவுடனான நெருக்கமான உறவிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இது இந்தியாவைப் பொறுத்தளவில் தனது இருப்பை நிலைப்படுத்துவதில் இது பெற்றுக் கொண்ட இரண்டாவது வெற்றியாகும்.

தென்னிலங்கையில் துறைமுகம் மற்றும் விமானநிலையம் ஆகியவற்றை அமைத்தல் உட்பட சீனாவின் மிகப் பெரிய முதலீட்டுத் திட்டங்கள் இந்தியாவால் நன்கு உற்றுநோக்கப்பட்டது.

கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சவைத் தோல்வியுறச் செய்து நாட்டின் அதிபராகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, சீனாவின் பாரிய திட்டங்கள் சிலவற்றை விரைவாக இடைநிறுத்தினார்.

அத்துடன் மகிந்த ராஜபக்சவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டார்.

ஆசியாவின் மிகப் பாரிய இரண்டு அதிகாரம் மிக்க நாடுகளையும் தனக்குச் சார்பாகப் பயன்படுத்துவதே ராஜபக்சவின் நோக்காகக் காணப்பட்டது. தான் பிரதமராக தெரிவானால் சீனாவிற்கு மீண்டும் உந்துதல் வழங்கி திட்டங்களை மேற்கொள்ள முடியும் என ராஜபக்ச கருதினார்.

ஆனால் இத்திட்டம் நிறைவேறவில்லை. சிறிலங்கா சீனாவுடன் திட்டங்களை மேற்கொள்ள முன்வர விரும்பும் போது அதனுடைய கைகள் கட்டப்பட்டுப்பட்டுள்ளன என்பதை நினைவிற்கு கொள்ள எவரும் மறந்துவிடக் கூடாது.

சீனாவின் பல பில்லியன் டொலர் பெறுமதியான திட்டங்கள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் சிறிலங்காவின் போரால் சிதைவுற்றுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் சீனாவின் நிதி பங்களிக்கமாட்டாது.

அத்துடன் உள்நாட்டுத் தொழில் வாய்ப்புக்களும் இழக்கப்பட்டுள்ளன. புலிகளுக்கு எதிரான யுத்தத்தைத் தோற்கடிப்பதில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சீனா உதவியது. இந்த சூழ்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் குறிதவறினால் மீண்டும் சிறிலங்கா தன்னிடம் உதவி கோரும் என்பது சீனாவுக்கு நன்கு தெரியும்.

‘சார்புநிலை அரசியலானது சீனா-சிறிலங்கா இரு தரப்பு உறவில் செல்வாக்குச் செலுத்தியிருப்பினும் சீனாவின் செல்வாக்கை மிகைப்படுத்துவது பொருத்தமானதல்ல. சீனாவுடனான உயர் மட்ட மூலோபாய ஒத்துழைப்பானது சிறிலங்காவின் நாடாளுமன்றில் இரு கட்சி ஆட்சி இடம்பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.

எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் அந்த அரசாங்கம் சீனாவுடன் நல்லுறவைப் பேணும்’ என நான்காவது தடவையாக சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் ‘குளோபல் ரைம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவுடன் ரணில் விக்கிரமசிங்க ஆழமான முதலீட்டு உறவுகளை மேம்படுத்தவுள்ளதாக சில அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளையில் மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவின் அதிபரானவுடன் முதன்முதலாக இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். இரண்டாவதாகவே இவர் சீனாவுக்குச் சென்றிருந்தார்.

மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியாவின் முன்னைய அரசாங்கம் அரசியல் ரீதியாக சிறிலங்காவின் முன்னாள் ராஜபக்ச அரசாங்கம் மீது அழுத்தம் விளைவித்ததைத் தொடர்ந்தே ராஜபக்ச, சீனாவுடனான உறவை நெருக்கமாக்கினார்.

மன்மோகன் சிங் அரசாங்கம் மீதான உள்நாட்டு அரசியல் அழுத்தமே இது சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்குக் காலாக அமைந்தது. ஆனால் இந்தியாவின் தற்போதைய நரேந்திர மோடி அரசாங்கமானது நாடாளுமன்றில் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால் தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு உட்பட வேண்டியதில்லை.

சீனா மற்றும் சிறிலங்கா இடையிலான உறவு மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உருவான ஒன்றல்ல. இது இக்காலப்பகுதியில் மேலும் நெருக்கமடைந்திருந்ததே அன்றி நீண்ட காலமாக சீனாவுடன் சிறிலங்கா நட்புறவைப் பேணி வந்துள்ளது.

சிறிசேன அரசாங்கம் தனது வெளியுறவுக் கோட்பாட்டை மீளவும் புதுப்பிப்பதுடன் இதன் ஊடாக தனது பிராந்தியத்திலுள்ள மிகப்பெரும் சக்தி வாய்ந்த நாடுகளுடன் சமஅணுகுமுறையைக் கடைப்பிடிக்க முயற்சிக்கும் போது இதில் சீனாவை சிறிலங்கா ஒருபோதும் அசட்டை செய்துவிட முடியாது.

சார்புநிலை அரசியல் என்பது சீனா-சிறிலங்கா உறவுநிலையில் தேக்கத்தை அல்லது மீண்டும் புதுப்பிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். சீனா தனது இருதரப்பு உறவுநிலையை வலுப்படுத்துவதற்கு எந்தவொரு தனியொரு கட்சியிலும் தங்கியிருக்காது என ‘குளோபல் ரைம்ஸ்“ சுட்டிக்காட்டியுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட சீனாவின் முதலீட்டுத் திட்டங்களை தனது நாட்டின் பொருளாதார அபிவிருத்தித் தேவைகளுக்காக சிறிலங்கா மீண்டும் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா தனது நலன்களை பராமரித்துக் கொள்வதுடன் கொழும்புடன் தொடர்ந்தும் உறவைப் பேணுவதையும் இதன் மீது தான் செல்வாக்குச் செலுத்துவதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் அதேவேளையில், சீனாவிடமிருந்து சிறிலங்காவை ஓரங்கட்டுவதற்கு இந்தியாவால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.

காலிமுகத்திடலில் காணப்படும் இரண்டு பீரங்கிகளும் இந்திய மாக்கடலின் அலைகளுக்குள் அகப்படாது மணலில் பாதுகாக்கப்பட்டுள்ளது போல் சிறிலங்காவும் சீனாவின் உதவியை நாடி நிற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *