மேலும்

கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி- ஆதரவாகவும் எதிராகவும் வாதப்பிரதிவாதங்கள்

sampanthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், வழங்கப்படக் கூடாது என்றும்  பரவலான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக் கூடாது என்றும் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் மட்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

பொது பலசேனா, தேசப்பற்று தேசிய இயக்கம் போன்ற சிங்கள இனவாத அமைப்புகள் இதற்கு ஆதரவளித்து வருகின்றன.

இந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நாட்டுக்கு  எதிராக செயற்படும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக் கூடாது என்றும், அவர்கள்  பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செயற்பட்டு வரும் அதேவேளை, அனைத்துலக விசாரணை கோரிவருவதால் அவர்களுக்கு அப்பதவியை வழங்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்தியக் கட்சி என்றும், எனவே அவர்களால் பொதுவான எதிர்க்கட்சியாக செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஐ தே கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் நல்லிணக்க ஆட்சியமைக்க  உடன்பாடு செய்துள்ளதாலும் முஸ்லிதம் மற்றும் ஈ பி டி பி என்பன அரசாங்கத் தரப்பில் அமர இருப்பதாலும் எதிர்த்தரப்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி ஆகிய இரு கட்சிகளில் ஒன்றிலிருந்தே எதிர்க் கட்சித் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என  ஜே வி பி தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிவில் சமூக அமைப்பான மக்கள் சக்தி (புரவசி பலகாய), கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் சமமாக நடத்தப்படுகின்றனர் என்று வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதாவுட செனிவிரத்ன உள்ளிட்ட பல தலைவர்களும், கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *