மேலும்

பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

sarath-fonsekaவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியே மரணமாகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறியிருந்தார்.

பிரபாகரனின் தலையில் ஏற்பட்ட காயம், அவரது கைத்துப்பாக்கியால் சுடப்பட்டதாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்தக் கூற்றை போருக்குத் தலைமை தாங்கிய சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு கருத்து வெளியிடுகையில்,

“ பிரபாகரனின் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. மண்டையோட்டின் ஒரு பகுதி பிளவுபட்டிருந்தது. அவர் தன்னைத் தானே சுட்டிருந்தால், தலையின் அடுத்த பக்கத்தின் ஊடாக ரவை வெளியேறியிருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

அவரது தலையில் மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியிருக்கக் கூடும்.” என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் உடல் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, சரத் பொன்சேகா, சட்டப்படி காவல்துறையினர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர் என்றும், அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும், மகள் துவாரகா ஆகியோர் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கருணா கூறியுள்ளது குறித்து கருத்து வெளியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதுபற்றிய தகவல்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் இரண்டாவது மகனான 12 வயது பாலச்சந்திரன், கைப்பற்றப்பட்டது பற்றிய படங்களை சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருந்தாலும் அதுபற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“போரின் பின்னர் எல்லாச் சடலங்களையும் இராணுவங்கள் அடையாளம் காண்பதில்லை. நாம் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியின் சடலத்தை கண்டுபிடித்தோம், அடையாளம் கண்டோம்” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, போரின் இறுதிக்கட்டம் வரையில், அவருடன் செய்மதித் தொலைபேசியில் தொடர்பில் இருந்தவரான, கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், இதுகுறித்து கருத்து வெளியிடுகையில்,

“நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாத நிலையில், அடர்த்தியான சமர் ஒன்றில் ஒருவர் எவ்வாறு உயிரிழந்தார் என்று கூறுவது சாத்தியமற்றது. அப்போது பிரபாகரனைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும், நந்திக்கடலில் நடந்த இறுதிச்சண்டையில் மரணமாகி விட்டனர்” என்று கூறியுள்ளார்.

பிரபாகரனின் உடலில் ஒரே ஒரு காயம் மட்டுமே காணப்பட்டது. தலையில் தான் அந்தக் காயம் ஏற்பட்டிருந்தது என்று, பிரபாகரனின் உடல் அடையாளம் காணப்பட்ட போது, அங்கிருந்த சண்டே ஒப்சேவர் வாரஇதழின் ஊடகவியலாளர் ரணில் விஜயபால தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *