மேலும்

மகிந்தவின் பலம் மேலும் வீழ்ச்சி – மைத்திரியின் கையில் சுதந்திரக் கட்சியின் அதிகாரம்

maithriசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன  கட்சிக்குள் தனது அதிகாரத்தை வலுப்படுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு கட்டுப்பட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் பிரதம எதிர்க்கட்சிக் கொரடா, பிரதி சபாநாயகர், மற்றும் அமைச்சர்கள் தொடர்பான நியமனங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 95 உறுப்பினர்களில், 80 பேர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை் ஏற்றுக் கொண்டு அவரது முடிவுகளுக்கு கட்டுப்பட்டுச் செயற்பட இணங்கியுள்ளனர்.

அதேவேளை, மத்திய குழுவின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால், மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் பலம் வெகுவாக குறைந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், மேல் மாகாண முதலமைச்சராக இருந்த பிரசன்ன ரணதுங்கவின் இல்லத்தில் மகிந்த ராஜபக்ச நடத்திய கூட்டத்தில் 60 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரப் போவதாக தெரிவித்திருந்தார் மகிந்த ராஜபக்ச.

ஆனால் தற்போது அவருடன் 20இற்கும் குறைவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரே எதிர்க்கட்சி வரிசையில் அமரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தொடர்பான கடும் போக்கையும் தளர்த்திக் கொள்ளவும் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்சவின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்த விசாரணைகள் தீவிரம் பெறுவதைத் தடுத்து, தனதும் ராஜபக்ச குடும்பத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கே அவர், தீவிர அரசியல் செயற்பாடுகளை சற்று தளர்த்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மேலாதிக்கம் செலுத்தும் மகிந்த ராஜபக்சவின் திட்டங்கள் அனைத்தும் தோல்வி கண்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் ஆதிக்கம் வலுப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *