மேலும்

சிறிலங்கா இராணுவத்தின் ஓமந்தை சோதனைச்சாவடி நீக்கம் – ஜெனிவாவுக்கு முன்னோட்டம்

omanthai checkpointசுமார் இரண்டு பத்தாண்டுகளுக்கு மேலாக ஓமந்தையில் இயங்கி வந்த சிறிலங்கா இராணுவச் சோதனைச்சாவடியில் இன்று முதல் சோதனையிடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

1990களின் துவக்கத்தில், முதலாம் கட்ட  ஈழப்போர் காலத்தில் இருந்து ஓமந்தையில், சிறிலங்கா இராணுவத்தின் சோதனைச்சாவடி இயங்கி வந்தது.

வடக்கிற்குச் செல்லும், வடக்கில் இருந்து வெளியேறும் பயணிகளைச் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாக ஓமந்தை தடை முகாம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

எனினும், பிற்காலத்தில், போர்க்கள நிலவரங்களுக்கேற்ப, அவ்வப்போது, இதன் தேவைப்பாடுகள் மாற்றமடைந்த போதிலும், தொடர்ந்தும் அது முக்கியமான சோதனைச்சாவடியாக இருந்து வந்தது.

2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கிற்குச் செல்லும்- வடக்கில் இருந்து வெளியேறும், வாகனங்கள் மற்றும், பயணிகளை சோதனையிடும் இடமாக ஓமந்தைச் சோதனைச்சாவடி  பயன்பாட்டில் இருந்தது.

இந்த ஆண்டு துவக்கத்தில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், வடக்கில் பல சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்ட போதிலும், ஓமந்தை தடைமுகாமில் மட்டுப்படுத்தப்பட்டளவு சோதனைகள், பதிவுகள் இடம்பெற்று வந்தன.

இந்தநிலையிலேயே, இன்று ஓமந்தைச் சோதனைச்சாவடி ஊடாக வாகனங்கள் கட்டுப்பாடுகளின்றி நேர்வழியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

ஜெனிவாவில் அடுத்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படவுள்ள நிலையில், இந்த சோதனைச்சாவடியில் சோதனையிடும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் திருகோணமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, சிறிலங்கா இராணுவம் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், அதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *