மேலும்

மீண்டும் பிற்போடப்பட்டது அமைச்சரவை பதவியேற்பு

sri-lanka-Presidential-Secretariatஇன்று நடப்பதாக இருந்த சிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 51 பேர் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்காவின் புதிய அமைச்சரவை வரும் நாளை மறுநாளே பதவியேற்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் மட்டும் அங்கம் வகிக்கமுடியும். அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அதிபர் மற்றும் பிரதமரை உள்ளடக்கியதாகவே 30 பேர் அமைச்சரவையில் இடம்பெற முடியும்.

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் போது மட்டும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

ஏற்கனவே மூன்று வெளிவிவகார, நீதி, புனர்வாழ்வு அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரதமர், அதிபர் தவிர, 25 பேரை மட்டுமே தற்போது அமைச்சர்களாக நியமிக்க முடியும்.

இவர்கள் அடுத்த சில நாட்களில் பதவியேற்பர் என்றும் எஞ்சியோர் எதிர்வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் நாடாளுமன்றம் கூடிய பின்னரே அமைச்சராகப் பதவியேற்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல அமைச்சர்கள் ஏற்கனவே வகித்த பொறுப்புகளில் நியமிக்கப்படவுள்ள அதேவேளை, சிலரின் பொறுப்புகள் மாற்றப்படவுள்ளன.

சம்பிக்க ரணவக்கவிடம் இருந்த சக்தி, மின்வலு அமைச்சு வேறொருவரிடம் கையளிக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சுப் பதவி தொடர்ந்தும் அகில விராஜ் காரியவசமிடமே இருக்கும்.

பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கிரியெல்லவுக்கும் புதிய பொறுப்பு வழங்கப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபரும், பிரதமரும் இணைந்து அமைச்சுப் பதவிகள் குறித்து முடிவகளை எடுக்கவுள்ளனர்.

அதேவேளை, 51 பேர் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அமைச்சர் பதவிகளில், ஐதேகவுக்கு 28 அமைச்சுக்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 17 அமைச்சுக்களும், ஏனைய 6 அமைச்சுக்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் பகிரப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *