மேலும்

சிறிலங்காவுக்கு மீண்டும் ஆதரவை உறுதிப்படுத்தியது அமெரிக்கா

Mangala_Nishaநல்லிணக்கம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த சிறிலங்காவுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும் என்று, தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இன்று அதிகாலை 3.25 மணியளவில் கொழும்பு வந்த, நிஷா பிஸ்வால் இன்று காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நிஷா பிஸ்வாலுடன் கொழும்பு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும், சிறிலங்காவுக்கான புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள அதுல் கெசாப்பும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இணைந்து, நிஷா பிஸ்வால், ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட நிஷா பிஸ்வால், செழிப்பு, அமைதி, நல்லாட்சியை நோக்கிய ஜனநாயகப் பாதையை நோக்கிய சிறிலங்கா அரசாங்கத்தினதும். மக்களினதும்,அர்ப்பணிப்பு வெளிப்பட்டுள்ள இந்த முக்கியமான நேரத்தில், அமெரிக்காவினது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட சம்பூரில்  மீள்குடியேற்றம் மற்றும் கல்விக்காக நாம் ஒரு மில்லியன் டொலர் வளங்களை வழங்கவுள்ளோம்.

சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் புதிய அரசாங்கத்துடன்  இணைந்து பணியாற்ற நாம் எதிர்பார்க்கிறோம்.” என்று தெரிவித்தார்.

Mangala-Nisha

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிடுகையில், “போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வது குறித்து, அமெரிக்க தரப்புக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பின்னர், சிறிலங்காவுடன் அமெரிக்கா கலந்துரையாடி வருகிறது.

எமது முன்னைய சந்திப்புகளின் போது, வொசிங்டனுக்கான எனது பயணத்தின் பின்னர், எமது பன்முக உறவை  மீளக்கட்டியெழுப்ப இணக்கம் கண்டிருந்தோம்.

கடந்த மே மாதம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, பல புதிய விடயங்களில் ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பாக அடையாளம் கண்டோம்.

எமது இன்றைய பேச்சுக்கள், அந்தப் புரிந்துணர்வு மற்றும் நெருக்கமான உறவுகள் தொடர்புகளை நோக்கிப் பணியாற்றுவதை அடிப்படையாக கொண்டிருந்தன.

தற்போதைய அமெரிக்க- சிறிலங்கா உறவுகளை உயர்ந்த மட்டத்துக்கு கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்காவின் மனித உரிமைகள், ஜனநாயகம், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி கருத்து வெளியிட்ட போது, “குறுகிய காலத்துக்குள் சிறிலங்கா அரசாங்கத்தினால் உறுதியான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன.

சிறிலங்கா மக்களால் இந்த ஆண்டில் எமக்கு இரண்டு தடவைகள் முக்கியமான தகவல் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கில் உள்ள அனைத்து மக்களும் தாம் மாற்றத்துக்கு ஆதரவளிப்பதாக எமக்கு கூறியுள்ளனர்.

இரண்டு தடவைகள் அவர்கள், சட்டத்தின் ஆட்சிக்காக, நல்லிணக்கம், நாட்டைப் கட்டியெழுப்புவதற்காக, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவும், தண்டனை விலக்குரிமைக்கு எதிராகவும், இன மற்றும் மதப் பிரிவினை அரசியலுக்கு எதிராகவும் வாக்களித்திருக்கிறார்கள்.

குறுகிய காலத்துக்குள் சிறிலங்காவில் இருந்து ஆச்சரியங்களை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.

சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விரும்புகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *