மேலும்

உடையும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி – மகிந்த தலைமையில் உருவாகிறது தனியான அணி?

mahinda-maithriசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும், தேசிய அரசாங்த்தில் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராகியுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏனைய தரப்பினருடன் இணைந்து தனியான அணியொன்றை உருவாக்கவுள்ளனர்.

இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி வரிசையில் அமரத் திட்டமிட்டுள்ளார். அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தனியான அணியொன்றை உருவாக்குவது தொடர்பாக இன்று முடிவெடுக்கவுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 20 உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளை ஏற்கவுள்ளதுடன், மேலும் அதற்குச் சமமான எண்ணிக்கையிலானவர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கவுள்ளனர்.

அவர்களில், நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, சரத் அமுனுகம, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஏ.எச்.எம்.பௌசி, சுதர்சினி பெர்னான்டோ புள்ளே, டிலான் பெரேரா ஆகியோரும் அடங்கியுள்ளனர்.

அதேவேளை மகிந்த ராஜபக்ச அணியினர் கடந்த புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் டலஸ் அழகப்பெரும, குமார வெல்கம, பவித்ரா வன்னியாராச்சி, ரி.பி.எக்கநாயக்க உள்ளிட்ட 50இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையின் முடிவுகளுக்குக் கட்டுப்படாத உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் எச்சரித்துள்ளார்.

இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள், நாடாளுமன்றத்தில் தனியாக இயங்குவது தொடர்பாகவும், கூட்டணிக்குள் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் இன்று முடிவெடுக்கும் என்று தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள 14 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அல்லாத ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களான சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமனத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதும் அந்த அணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மகிந்த ஆதரவாளரான ஜி.எல்.பீரிஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ.குணசேகர, லங்கா சமசமாஜ கட்சின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண போன்றோருக்கும் தேசியப் பட்டியல் ஆசனம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *