மேலும்

சிறிலங்கா தேர்தலை அமெரிக்கா மூலதனமாக்க வேண்டும் – அமெரிக்க சிந்தனைக் குழாம் அறிவுரை

Lisa Curtisசிறிலங்காவின் வரலாற்று ரீதியான தேர்தல் முடிவுகளை அமெரிக்கா மூலதனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதிய அரசாங்கத்துடன், பொருளாதார, அரசியல், பாதுகாப்பு ஒத்துழைப்பு உறவுகளை முன்னேற்ற வேண்டும் என்றும், அந்த நாட்டின் பழமைவாத சிந்தனை குழாம் ஒன்று தெரிவித்துள்ளது.

வொசிங்டனைத் தளமாக கொண்ட, Heritage Foundation என்ற பழமைவாதச் சிந்தனையாளர் குழாமின் மூத்த ஆய்வாளரான லிசா கேட்டிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக கூட்டணி பெற்றுள்ள வெற்றியைப் பயன்படுத்திக் கொண்டு, சிறிலங்காவுடன்னான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தக் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் உள்ள, முக்கியமான இடத்தில் அமைந்துள்ள ஒரு நாட்டில், அமைதி, நல்லிணக்கம், உறுதிப்பாடு, ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு, வொசிங்டனுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இதுவாகும்.

ஆறு மாதங்களுக்கு முன்னர், ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் இன நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான, கூட்டணி அரசாங்கம், தொடர்ந்து முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, சீனா பக்கம் சார்புடையதாக இருந்தது போல இல்லாமல், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும்,  கூடுதல் சமநிலையான ஒரு வெளிநாட்டுக் கொள்கையை புதிய அரசாங்கம் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் ஆரம்பித்த சாதகமான மாற்றங்கள், தொடரும் என்பது, அமெரிக்காவுக்கு பெருமூச்சு விட்டு சுவாசிப்பதற்கான வாய்ப்பை அளித்துள்ளது.

தேர்தல் முடிவுகளை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா, புதிய அரசாங்கத்துடன், அரசியல், பொருளாதார, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது ஆசியாவுக்கும் மத்திய கிழக்கிற்கும் இடையிலான கடற்பாதையில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவு நாடான சிறிலங்காவில், ஜனநாயகத்தையும், உறுதிப்பாட்டையும் ஏற்படுத்த இது உதவியாக அமையும்.

இன்னும், குறிப்பாக, நாட்டின் ஒட்டுமொத்த சட்ட மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைகளை வலுப்படுத்துவதற்கு, சட்டத்தை மீள நடைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு தொழில்நுட்ப ஆதரவு மற்றும், சட்ட பொறிமுறைகளையும், சிறிலங்காவுக்கு அமெரிக்கா வழங்க வேண்டும்.

போரின் இறுதிநாட்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு, ராஜபக்ச அரசாங்கம் பதிலளிக்கத் தவறியதையடுத்து,  சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளுக்கு அமெரிக்க காங்கிரஸ் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், சிறிலங்காவுக்கான அமெரிக்க பயிற்சித் திட்டங்களையும், பாதுகாப்பு ஒத்துழைப்பையும், அமெரிக்கா மீள ஆரம்பிக்க வேண்டும்.

மனித உரிமைகளை முன்னேற்றவும், கடந்தகால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளையும், உருவாக்க புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், இராணுவப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் வழக்கமான இராணுவ பரிமாற்றங்களை ஆரம்பிக்கத் தயார் என்ற தெளிவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்க வேண்டும்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் இணக்கத்தை எட்டுவதற்கான நேரத்தை வொசிங்டன் வீணடிக்கக் கூடாது. புதிய பிரதமரை அதிகாரபூர்வ பயணமாக அமெரிக்காவுக்கு அழைக்க வேண்டும்.

நீண்டகாலமாக அமெரிக்க சிறிலங்கா உறவுகள் தேக்கமடைந்துள்ள நிலையில், புதிய திசையில் நாடு செல்வதை ஆதரிப்பதை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்.

ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தவும், பொருளாதார ஒத்துழைப்பை கட்டியெழுப்பவும், பரஸ்பர பாதுகாப்பு நலன்களை பாதுகாக்கவும் பங்காளராக இருக்கத் தயார் என்பதை தெரிவிக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *