மேலும்

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் யாருக்கு?- சம்பந்தன் பதில்

TNa-manifasto-jaffna (1)தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, கூட்டமைப்பின் உயர் மட்டக் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என்று, அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில், 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

தேர்தல் சட்டங்களின் படி, ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் வேட்பாளர்களாக 9 பேரின் பெயர்களை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளது.

எனினும், இந்தப் பட்டியலில் இருந்தோ, நடந்து முடிந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களில் இருந்தோ, இரண்டு பேரை தேசியப் பட்டியல் உறுப்பினராக, கூட்டமைப்பினால் நியமிக்க முடியும்.

இந்தநிலையில், தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக கூட்டமைப்பு யாரை நியமிக்கவுள்ளது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு, குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த அருந்தவபாலனுக்கு தேசியப் பட்டியலில் இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தென்மராட்சி ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மட்டக்களப்பில் முதல் முறையாக பட்டிருப்புத் தொகுதிக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளதால், அந்த தொகுதியைச் சேர்ந்தவர்களும், தேர்தலில் தோல்வியடைந்தவர்களுமான பொன்.செல்வராசா, அரியநேத்திரன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோரில் ஒருவரை நியமிக்க வேண்டும்  என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தோல்வியடைந்த வேட்பாளர்கள் பலரும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் மற்றும் புதிய அரசாங்கம் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பன தொடர்பாக, தமது கட்சியின் உயர் மட்டக்  கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  ஒரு வாரத்துக்குள் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச்செயலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *