மேலும்

மக்களின் ஆணைக்கு மதிப்பளியுங்கள் – மைத்திரிக்கு மகிந்த பதில் கடிதம்

mahinda-maithripalaவரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்கும் ஆணைக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், சுதந்திரக் கட்சியின் ஏனைய தலைவர்களுக்கு வழிவிடும் வகையில், ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஐந்து பக்க கடிதம் ஒன்றை மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியிருந்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் மகிந்த ராஜபக்ச  இன்று ஒரு பக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “நீங்கள் அனுப்பிய 2015-08-12 ஆம் நாளிடப்பட்ட கடிதம் 2015-08-13 ஆம் நாள் கிடைத்தது.

அந்த கடிதத்தில் உள்ள, மூன்றாம் தரப்பின் கருத்துக்களை அடிப்படையாக கொண்ட, விமர்சனங்கள் அடிப்படையற்றவை என்று நிராகரிக்கிறேன்.

2015 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, முன்வைக்கப்பட்டுள்ள,  கருத்துக்களின்படி நாடாளுமன்றில் பெரும்பான்மை பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் 2015-01-09ஆம் நாள் அதிபர் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறியமை மற்றும் சில நாட்களுக்குப் பின் சிறிலங்கா சுதந்திர கட்சி தலைவர் பதவி மற்றும் கட்சியை உங்களிடம் ஒப்படைத்தமை ஆகியன, உங்கள் கோரிக்கைக்கு அமைய நான் எடுத்த தீர்மானத்தின் பேரிலாகும்.

ஆனால் 2015 பெப்ரவரி மாதம் கட்சியின் பெரும்பாலானவர்கள் மற்றும் மக்கள், மீண்டும் அரசியலுக்கு வருமாறு என்னை தூண்டியதை நான் நினைவுபடுத்துகிறேன்.

நான் 2015 ஜனவரி 9ஆம் நாள் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல, நீங்களும் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *