மேலும்

சிறிலங்காவை இந்தியா தக்கவைத்துக் கொள்ள முடியுமா? – கேணல் ஹரிகரன்

india-chinaசீனா ஒருபோதும் சிறிலங்காவைக் கைவிடப் போவதில்லை. இந்திய மாக்கடலிலும் தென்னாசியாவிலும் சீனா மிகப் பாரிய மூலோபாய நலனைக் கொண்டுள்ளது. இந்திய மாக்கடலில் சீனாவின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் சிறிலங்கா மையமாக விளங்குகிறது.

இவ்வாறு colombo telegraph ஊடகத்தில் கேணல் ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மத்தியிலும் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. பொதுத்தேர்தலின் மூலம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிப்பீடத்தில் ஏறவேண்டும் என சீனாவும் கடவுளை வேண்டுகிறது.

ஆகஸ்ட் 17, 2015 அன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்று நாட்டின் பிரதமராகப் பதவியேற்க வேண்டும் என்பது சீனாவின் விருப்பாகும்.

கடந்த ஜனவரி மாதம் சிறிலங்காவின் அதிபராக, மகிந்தவைப் புறக்கணித்து விட்டு,  மைத்திரிபால சிறிசேனவை  இலங்கையர்கள் தேர்ந்தெடுத்த போது, சீனாவின் பல்வேறு இராஜதந்திர முயற்சிகளும் இடைநிறுத்தப்பட்டன. இதனால் சீனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச சிறிலங்காவின் அதிபராக இரண்டாவது தடவையாக ஆட்சி செய்த காலத்தில் சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட 1.4 பில்லியன் பெறுமதியான கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது சிறிசேன அரசாங்கத்தால் இடைநிறுத்தப்பட்டது.

இத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல் மோசடிகளே இதற்கான காரணமாகும். எவ்வாறெனினும், சீனாவின் மிகப் பாரிய திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டால் சீனா மற்றும் சிறிலங்கா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் பாதகம் ஏற்படும் என்பதை இவ்விரண்டும் புரிந்து கொள்ள முயற்சித்தன.

அதாவது சிறிலங்கா சீனாவிடமிருந்து பெரும் தொகையான கடனைப் பெற்றுள்ளது. அத்துடன் சீனாவும் சிறிலங்காவில் அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவும் சீனாவிற்கான தமது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டனர். இதன் மூலம் சிறிலங்காவுடனான முறிந்து போன உறவு மீளவும் கட்டியெழுப்பப்படும் என சீனா நம்பிக்கை கொண்டது.

இதன் பின்னர், சிறிலங்காவில் தனது செல்வாக்கைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என சீனா நம்பியது. சீனாவிற்கு ஆதரவு வழங்கும் மகிந்த ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீனாவின் சில திட்டங்கள் மீண்டும் சிறிலங்காவில் தொடரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிலங்கா மீண்டும் சீனாவுடனான தனது உறவைப் புதுப்பித்துக் கொள்ள விரும்புவதையே சுட்டிக்காட்டுகின்றது.

சீனாவின் நிதியுதவியுடன் மாத்தறை-அம்பாந்தோட்டை அதிவேகப் பாதை அமைக்கும் திட்டம் கடந்த மாதம் 07ம் திகதி சிறிலங்கா அதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டமானது காலியின் ஊடாக கொழும்பு – மாத்தறை அதிவேகப் பாதையுடன் தொடர்பை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டதாகும்.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் உள்நாட்டு மக்கள் பலர் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இதனால் தாம் திருப்தி கொள்வதாகவும் கொழும்பிற்கான சீனத் தூதுவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காலி – மாத்தறை அதிவேகப் பாதைத் திட்டத்திற்காக சீனாவின் எக்சிம் வங்கி 180 மில்லியன் டொலர்களை  வழங்கியுள்ளது. இதேபோன்று அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தின் இரண்டாம் கட்டமும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் ஒரே தடவையில் 12 கப்பல்கள் தரித்து வைக்க முடியும். தற்போது இரண்டு கப்பல்கள் மட்டுமே தரித்து நிறுத்த முடிவதாக கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விவகாரங்களை நோக்கில் சீன-சிறிலங்கா ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் சிறிலங்காவின் சிறப்புப் படைகள் மற்றும் படையணிகள் ‘பட்டுப்பாதை 2015’ என்கின்ற மூன்று வார பயிற்சித் திட்டத்தைத் பூர்த்தி செய்துள்ளன. இதன் மூலம் இவ்விரு நாட்டு இராணுவ வீரர்களின் கூட்டுச் சிறப்பு நடவடிக்கைகள் மேலும் முன்னேற்றப்படும்.

கடந்த மாதம், மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் சீன இராணுவக் குழு ஒன்று சிறிலங்காவுக்குப் பயணம் செய்திருந்தது. இந்தக் குழுவினர் சிறிலங்காவின் தியத்தலாவவிலுள்ள சிறிலங்கா இராணுவக் கல்லூரியில் சீன நிதியுதவியுடன் அமைக்கப்படும் அரங்கத்தைப் பார்வையிட்டு இத்திட்டம் தொடர்பாக மீளாய்வு செய்திருந்தது.

சிறிலங்காவின் கிராமிய மட்ட மக்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் சீனா உணரத் தவறவில்லை. சீனத் தொடர்பாடல் நிறுவனத்தின் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மற்றும் சீனத் துறைமுக சிறிலங்காப் பிராந்திய நிறுவனம் போன்றன போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வடக்கிலுள்ள புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் நான்கு குடிநீர்க் கிணறுகளை அமைப்பதற்கான 14,400 டொலர் நிதியை நன்கொடையாக வழங்கியிருந்தன.

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தால் கைச்சாத்திடப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதற்கு அனுமதி வழங்கப்படும் என யூன் 20, 2015 அன்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்திருந்தமை சீனாவுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்காது.

சிறிலங்கா மீதும் அதன் அயல்நாடுகளான குறிப்பாக இந்தியா போன்றன மீதும் இத்திட்டத்தால் எதிர்விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகவே கொழும்பு நகரத் திட்டம் மீளாய்வு செய்யப்படுவதாக நீதி அமைச்சர் அறிவித்திருந்தார்.

சிறிலங்காவிற்கான தனது பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு சாதகமான பதிலளிக்கும் வகையில் சிறிலங்காவின் இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சீனாவுக்கு 350 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார். ‘இது சிறிலங்காவின் நில உரிமைச் சட்டத்தை முற்றிலும் மீறுகிறது. இத்திட்டமானது அதற்கான உடன்படிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இலங்கையர்கள் கூட இதற்குள் உள்நுழைவதற்கு நுழைவிசைவு தேவைப்பட்டிருக்கலாம்.

இந்த நிலத்தின் மேலுள்ள வான் பரப்பை இலங்கையர்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி பெறவேண்டியேற்பட்டிருக்கும். இவ்வாறானதொரு ஆபத்து இடம்பெறுவதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை.

சீனாவிற்கான தனது பயணத்தின் போது இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் அந்நாட்டு அதிபருடன் பேச்சுக்கள் நடாத்தியிருந்தார். இவ்வாறான சில சிக்கல்களைத் தீர்த்த பின்னரே கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்வதற்கான அனுமதி வழங்கப்படும்’ என சிறிலங்காவின் நிதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

கொழும்புத் துறைமுகத்தில் இந்தியாவானது கிட்டத்தட்ட 70 சதவீதச் செயற்பாடுகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் இத்துறைமுகம் மீது சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதானது இந்தியாவின் மூலோபாய நலன்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது.

சிறிசேன அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணும் அமெரிக்காவும் சீனாவைப் போன்றே சிறிலங்காவில் தனது மூலோபாய நலன்களை அடைந்து கொள்ள விரும்புகிறது. சிறிசேன அரசாங்கம் சீனாவுடன் உறவைத் தக்கவைத்துக் கொள்வதாக உறுதி தெரிவித்திருந்தாலும் கூட, இவர்களுக்கிடையில் ஏற்கனவே முறிந்து போன உறவானது மீளவும் நெருக்கமாவதற்கு சில காலங்கள் எடுக்கும். ஏனெனில் சீனாவில் தங்கியிராத வெளியுறவுக் கோட்பாட்டை அமுலாக்க சிறிலங்கா விரும்புகிறது.

இதனை சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, யப்பானுக்கு பயணம் செய்திருந்த போது வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். சீனாவில் தங்கியிருக்கக் கூடிய வெளியுறவுக் கோட்பாட்டை முன்னாள் அதிபர் வரைந்துள்ளார் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனாலும் தனது அரசாங்கமானது சீனா உட்பட அனைத்து நாடுகளிடமும் சமமான வெளியுறவுக் கோட்பாட்டைப் பேண விரும்புவதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார். ஜப்பானை விட சீனா, சிறிலங்காவிற்கு 2009ல் அதிக உதவிகளை வழங்கிய போதிலும் கூட, சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தின் கீழ் ஊழல் மோசடி இடம்பெற்றது.

சீனாவின் அதிக வட்டியுடன் கூடிய கடன்களிலிருந்து சிறிலங்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மிகக் குறைந்த வட்டியிலான கடன்களைப் பெற முயற்சிக்கிறது. இந்த அடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் மீளாய்வு செய்வதாகவும் கொழும்பிலுள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முயற்சிப்பதாகவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவே இவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ராஜபக்ச, சிறிலங்காவின் பிரதமரானால் மீண்டும் சீனாவுடனான உறவை வலுப்படுத்த முயற்சிப்பார். சீனாவுடனான உறவு தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் வினவப்பட்டபோது இதனை அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

சிறிலங்காவின் பிரதமரானால் சீனாவுடனான உறவைப் புதுப்பித்துக் கொள்வாரா என அண்மையில் நேர்காணல் ஒன்றில் மகிந்தவிடம் வினவப்பட்டது. அதன் போது ‘சீனாவுடன் மட்டுமல்ல, மேற்குலகம் உட்பட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணுவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படும்’ என மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவுடனான மோடியின் நல்லுறவானது சிறிசேன அரசாங்கம் சீனாவுடன் தனது உறவை சமப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவான சாதகமான நிலையை உருவாக்க வழிவகுத்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இந்தியப் பிரதமர் மோடி சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றுவதிலேயே சிறிலங்காவின் சீன உறவு தங்கியுள்ளது.

ஆனால் கடந்த காலத்தில், இந்தியாவானது தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளைக் குறித்த காலஅவகாசத்திற்குள் நிறைவேற்றத் தவறியுள்ளது.

சீனா ஒருபோதும் சிறிலங்காவைக் கைவிடப் போவதில்லை. இந்திய மாக்கடலிலும் தென்னாசியாவிலும் சீனா மிகப் பாரிய மூலோபாய நலனைக் கொண்டுள்ளது. இந்திய மாக்கடலில் சீனாவின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் சிறிலங்கா மையமாக விளங்குகிறது.

இதேபோன்று சீன அதிபரின் 20ம் நூற்றாண்டு கால கடல்சார் பாதைகளைப் பலப்படுத்துவதற்கான திட்டங்களை வெற்றி கொள்ளச் செய்வதற்கான சீனாவின் முதலீட்டு மையமாக சிறிலங்கா விளங்குகிறது. இந்திய மாக்கடலில் இந்தியத் தீபகற்பத்தின் பாதுகாப்பிற்கும் அதன் அதிகார வலுவுக்கும் சிறிலங்கா முதன்மைப் பங்காற்றுகிறது.

சிறிலங்காத் தீவின் ஆட்சியில் எவர் அமர்ந்தாலும் இந்தியாவானது தொடர்ந்தும் சிறிலங்காவுடன் வெற்றியளிக்கும் உறவைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என சாதாரணமாக எடைபோடக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *