மேலும்

கடத்தப்பட்டவர்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் – காவல்துறை அதிகாரி அதிர்ச்சி தகவல்

Prasantha-Jayakodyமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார், சிறிலங்கா காவல்துறையின் முன்னாள் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களால் நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த பிரசாந்த ஜெயக்கொடி, கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து நாடு திரும்பியிருந்தார்.

அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே, வெள்ளை வான் கடத்தல்களின் பின்னணி பற்றிய அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

‘முன்னைய ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் எவரும் தற்போது உயிருடன் இல்லை.

கடத்திச் செல்லப்பட்டவர்கள், அப்போது, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய கொலைக் கும்பலினால், கொலை செய்யப்பட்டு அவர்களின் சடலங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன.

இந்த கடத்தல்கள் மற்றும் கொலைகளுக்காக அரச படைகளில் உள்ளவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஆயுதக் குழுக்களும், சூட்சுமமாக இதற்குப் பயன்படுத்தப்பட்டன.

பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோத்தாபய ராஜபக்ச சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தன்னிச்சையாகச் செயற்பட்டார்.

அவர்களின் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத செயல்களை நியாயப்படுத்துமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளராக அப்போது கடமையாற்றிய எனக்கு வலியுறுத்தப்பட்டது. அதனை நான் நிராகரித்தேன்.

அதன் பிரதிபலனாக, எனக்கு பல இடமாற்றங்கள் கிடைத்தன. இறுதியாக என்னை மட்டக்களப்புக்கு இடமாற்றம் செய்து அங்கு கிழக்கு ஆயுதக் கும்பல்களை பயன்படுத்தி கொலை செய்ய திட்டமிட்டனர்.

அதையடுத்தே, நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது .

கடந்த ஆட்சிக்காலத்தில் மனிதர்கள் வாழ்வதா-  இல்லையா,  எவ்வளவு காலம் வாழ்வது  என்பது குறித்து தீர்மானித்ததும் மகிந்த ராஜபக்சவும் கோத்தாபய ராஜபக்சவும் தான்.

வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டவர்களின் விதியும் இதுவாகும்.

குறித்த குழு நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இயங்கியது. அதனுடன் தொடர்புடையவர்களும் இராணுவத்தில் இருந்த நபர்களே

அந்தக் கால கட்டத்தில் கொலன்னாவை நகர முதல்வரை கடத்திச் சென்றதும் இவர்களே.

மக்கள் அந்தக்குழுவை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த போதிலும் மூத்த காவல்துறை அதிகாரியும், கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவருமான அனுர சேனநாயக்க ஊடாக சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான என்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. நான் பொய் சொல்லவில்லை.

இந்த கடத்தல்கள், கொலைகளுடன் தொடர்புடையவர்கள் இன்னும் பணியில் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியமாகும். அதற்கு ஒத்துழைக்கவும் தயாராகவே இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *