மேலும்

மீண்டும் தலையெடுக்க முனையும் குடும்ப சர்வாதிகார ஆட்சி – தோற்கடிக்க அழைக்கிறார் சந்திரிகா

cbkமீண்டும் நாட்டில் குடும்ப சர்வாதிகார ஆட்சியைத் தோற்றுவிக்க முனையும் சக்திகளிடம் இருந்து நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்று, சிறிலங்காவின் முன்ன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஜனவரி மாதம் 8ஆம் நாள் நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகல மேன்மையான குடிமக்களுக்கும் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் சகோதரத்துவத்துடன் தலை வணங்குகின்றேன்.

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் நாள் இலங்கையில் அமைதியான ஒரு புரட்சியே நடைபெற்றது. அதாவது ஜனநாயகத்தை நாட்டில் நிலைநாட்ட குடிமக்கள் அனைவரும் பெற்றுக்கொண்ட பெறுமதியான வெற்றியாகும்.

அந்த வெற்றிக்கு பங்களிப்பு செய்த ஒருவர் என்ற ரீதியில் எதிர்வரும் தீர்மானம்மிக்க நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை இந்த சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்துவது எனது கடமை என நினைக்கிறேன்.

இந்த நாட்டில் மோசமான அடக்குமுறையை கையாண்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிராயுதபாணியாகவும், அதி வீரத்துடனும் முகம் கொடுத்து நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இந்த நாட்டின் நேர்மையான மக்கள் மகிந்த சாம்ராஜியத்தை தோல்வியடையச் செய்தீர்கள்.

இந்த போராட்டத்தில் எவர் மீதும் அடக்குமுறைகளை கையாளாது, சிறிதளவேனும் இரத்தம் சிந்தாமல் வெற்றி பெற்றமை உன்னதமான எடுத்துக்காட்டாகும்.

அவ்வாறான் அகிம்சாவழி போராட்டமானது எமது அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.

கடந்த அதிபர் தேர்தலின் பொது அரசபலத்துடனும், அரச சொத்துகள், காவல்துறை, இராணுவ மற்றும் அரச ஊடகங்களின் பலத்துடனும் இனவாத சக்திகளுடனும் இனவாதத்தை தோற்றுவித்துமே மகிந்த ராஜபக்ச களமிறங்கினார்.

ஒரு ஆட்சியாளர் அரச பலத்தை தனது வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் குறிக்கோளுடன் மனித உரிமைகளை மிலேச்சத்தனமாக பயன்படுத்தி தூரநோக்கு இல்லாமல் செயற்பட்டால் அந்த நாடு மோசமான நிலையை அடையும்.

அப்படியான துரதிஷ்டவசமான நிலைமைக்கு ஆளாகவிருந்த நாம் ஒரு ஜனநாயக போராட்டத்தின் மூலமாக தப்பித்து விட்டோம்.

அவ்வாறான ஒரு போரட்டத்தின் மூலம் வென்றெடுத்த வெற்றியை தொடர்ந்து பாதுகாக்க வேண்டியது நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் உண்டு.

அரச பலம் மற்றும் அரச சொத்துக்களை மிகவும் முறைகேடாக பயன்படுத்தி ஒரு குடும்பம் அவர்களுடைய நண்பர்கள் அனைவரினதும் விளையாட்டு களமாக இந்த நாட்டை மாற்ற எண்ணியிருந்த ஒரு கூட்டத்துக்கு எதிராக, நாட்டு மக்களுடன் இணைந்து மக்கள் நேசிக்கும் நல்லாட்சியை உருவாக்க இந்த போராட்டத்தில் இணைந்து கொள்வதில் நானும் முடிவு எடுத்திருந்தேன்.

நான் தொடர்ச்சியாக அரசியலில் இருப்பதை விரும்பவில்லை. உயர் பதவிகளை வகிக்கும் தலைவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என நினைப்பது கீழ்த்தரமான செயற்பாடாகும்.

ஆனால் இப்போது நாட்டுக்கும் எனது கட்சிக்கும் ஒரு தனி குடும்பத்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை எண்ணியே நாம் எனது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலருடனும் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட ஏனைய கட்சிகள், சிவில் அமைப்புகள் அனைவருடன் ஒன்றிணைந்து போராட அவசியமாக இருந்தது.

அதற்காவே நான் மீண்டும் அரசியல் பிரவேசத்தை மேற்கொண்டேன். அந்த போராட்டத்தில் வெற்றிகொண்டோம்.

ஜனவரி வெற்றியுடன் நல்லாட்சியின் பெறுபேறுகளை அனுபவிப்பதற்கு நாட்டின் எல்லாக் குடிமக்களுக்கும் பாக்கியம் கிடைத்தது. ஆனால் அந்த வெற்றியை எம்மிடம் இருந்து பறித்து நாட்டை மீண்டும் சர்வாதிகாரத்தின் பாதையில் கொண்டு செல்ல எம்மிடம் தோல்வி கண்டவர்கள் முயற்சிக்கின்றனர்.

நாட்டில் மீளவும் மக்களுக்கு எதிரான புரட்சியை ஏற்படுத்தி நாம் கட்டியெழுப்பிய அரசியல் சீர்திருத்தங்களை சின்னாபின்னமாக எமது கட்சியிலும் கூட்டணியிலும் ஒருசில தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.

பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து நல்லாட்சியை குழப்புவதறகு ஆரம்பித்துள்ளனர்.

ஆயினும் எந்தவொரு மோசமான நிலைமைக்கு மத்தியிலும் இந்த நாட்டில் நல்லாட்சியையும், அபிவிருத்திகளையும் ,மனித உரிமைகளையும் கட்டியெழுப்ப, சகல மக்களும் சுய கௌரவத்துடன் கூடிய நாட்டினை நாட்டை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

ஊழல், வெள்ளை வான் கலாசாரம், துஸ்பிரயோக ஆட்சியை இல்லாதொழிப்பது எமது முக்கிய கடமையாகும்.

இந்த நாட்டில் மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம்.

ஆனால் நாட்டில், மக்களால் தோற்கடிக்கப்பட்ட தலைவரை மீண்டும் நாட்டின் தலைமைத்துவத்துக்கு கொண்டுவரும் முயற்சிகள் பலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது ஜனநாயக ரீதியில் செயற்படுகின்றவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

ஆனால் நாட்டில் அடக்குமுறை ஆட்சியின் கீழ் கொண்டு வரும் குடும்ப ஆட்சிக்கு வாக்கு கொடுப்பதா அல்லது நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் ஆட்சிக்கு வாக்கு கொடுப்பதா என்பதே மக்களிடம் நாம் கேட்கும் கேள்வியாகும்.

இது தொடர்பில் ஆழமாக சிந்தித்து என்னுடைய நிலைபாட்டை முன்வைத்துள்ளேன். கட்சியை நேசிக்கும் நபர் நான். கட்சியின் மீதுள்ள அன்பும் அர்ப்பணிப்பும் ஒருநாளும் மாறவில்லை.

ஆனால் கட்சிக்கு முன்னர் நாடு மிகவும் முக்கியமாகும். நாட்டில் வென்றெடுத்த ஜனநாயகத்தை தொடர்ந்தும் தக்கவைப்பது மிகவும் அவசியமானதாகும்.

ஆகவே கட்சியின் அடிப்படையான கொள்கைகளை பலப்படுத்தி நாட்டில் வளமான ஆட்சியை உருவாக்குவதில் நான் எபோதும் அர்ப்பணிப்புடன் இருப்பேன்.

எம்மைப்போல் எமது எதிர்கால பரம்பரையும் அமைதியாக வாழக்கூடிய அமைதியான நாட்டை உருவாக்குவது எமது அவசியமாகும்.

புதிய நாட்டை உருவாக்க கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தினை வீணாக்க நினைக்கும் சக்திகளை இல்லாது ஒழித்து தேர்தலின் மூலமாக இந்த மோசடிக்கரகளை தோற்கடிக்க வேண்டும்.

வென்றெடுத்த ஜனநாயகத்தை காப்பாற்றும் நோக்கில் மத, மொழி பேதம் இன்றி அர்ப்பணிப்புடன் இருக்கும் தலைமைத்துவத்துடன் நாட்டை கட்டியெழுப்ப மக்கள் ஒன்றிணைய வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *