மேலும்

டெஸ்மன் டி சில்வாவின் தொழில் நடத்தை குறித்து பிரித்தானிய சட்ட நியமச் சபை விசாரணை

Sir-Desmond-de-Silvaசிறிலங்காவில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர் குழுவின் தலைவரான சேர் டெஸ்மன் டி சில்வாவின் தொழில் நடத்தை குறித்து பிரித்தானியாவின் சட்ட நியமச் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சிறிலங்காவில் அமைதி மற்றும் நீதிக்கான அமைப்பின் முறைப்பாட்டின் பேரில், சிறிலங்காவில் இவரது பங்கு தொடர்பான இந்த விசாரணை கடந்த ஜூலை 20 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட பரிஸ்டர்களால் மேற்கொள்ளப்படும் இந்த விசாரணை ஐந்து வாரங்களில் நிறைவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் சட்டவாளரான சேர்.டெஸ்மன் டி சில்வாவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதை, சிறிலங்காவில் நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பின்  பணிப்பாளர் பிரெட் காவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான வெளிநாட்டு நிபுணர் குழுவின் தலைவராக சேர் டெஸ்மன் டி சில்வாவை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த 2014ஆம் ஆண்டு நியமித்திருந்தார்.

இந்த விசாரணைக் குழுவின் பணி ஆணை, 2014 ஓகஸ்ட் மாதம், போரின் இறுதிக்கட்டங்களில் அரசபடைகளால் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்று விசாரிக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது.

இது தொடர்பாக சிறிலங்காவில் நீதி மற்றும் அமைதிக்கான அமைப்பு செய்துள்ள முறைப்பாட்டில், சேர் டெஸ்மன் சில்வாவிடம் 2014 பெப்ரவரி மாதம், சிறிலங்கா அரசாங்கம் போரின் இறுதிக்கட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாக எவ்வாறு அணுகலாம் என்பது குறித்து எழுத்து மூலமான சட்டஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது.

அதனையடுத்து, சேர் டெஸ்மன்ட் சில்வா சிறிலங்காவில் காணாமற்போனோர் மற்றும் உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்கும் சுதந்திர ஆணைக்குழுவுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவராகச் செயற்படுகிறார்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கிய சேர் டெஸ்மன்ட் சில்வா, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆலோசனைக் குழுவுக்கான நியமனத்தை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று இந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் சட்டங்களின்படி விசாரணை ஆணைக்குழு சுதந்திரமாக செயற்படுகின்ற அதேவேளை, சேர் டெஸ்மன்ட் டி சில்வா சுதந்திரமானவராக இருக்கமுடியாது.

அவர் ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்துக்கு தனது நிபுணத்துவ ஆலோசனைகளை எழுத்து மூலம் வழங்கியவர் என்றும் வாதிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கு அமையவே, பிரித்தானிய சட்ட நிபுணர்களின் ஒழுக்கநெறிகளுக்குப் பொறுப்பான சட்ட நியமச் சபை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், பரணகம ஆணைக்குழுவுக்கான ஆலோசனைக் குழுத்  தலைவராக சேர் டெஸ்மன்ட டி சில்வாவுக்கு அங்கீகாரம் அளித்திருப்பதற்கு, சிறிலங்காவின் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *