மேலும்

சிறிலங்கா தேர்தலைக் கண்காணிக்க 9 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது கொமன்வெல்த்

சிறிலங்காவின் தேர்தலைக் கண்காணிக்க, மோல்டா நாட்டின் முன்னாள் அதிபர் கலாநிதி ஜோர்ஜ் அபேலா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட கொமன்வெல்த் கண்காணிப்புக் குழுவை அனுப்பி வைப்பதாக, கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார்.

சிறிலங்கா தேர்தல் ஆணையாளரின் அழைப்பின் பேரில், எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள தேர்தலைக் கண்காணிக்க இந்தக் குழுவை அனுப்பி வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களின் போது,  சிறிலங்காவுக்கு கொமன்வெல்த் ஆதரவளித்த  வலுவான வரலாறு உள்ளது.

இந்த வகையில் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க கொமன்வெல்த் அழைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது  என்றும் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

நம்பகமான வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கைப் பாரம்பரியம் தொடரும் என்றும், பரப்புரைக் காலத்திலும், தேர்தலுக்கு முந்திய மற்றும் பிந்திய காலங்களிலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மதிக்கப்படும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தமக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொமன்வெல்த் கண்காணிப்புக் குழுவுக்கு,  தேர்தலைக் கண்காணிக்கவும், தேர்தல் முறையின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் காரணிகள் குறித்து கருத்தில் கொள்ளவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் சிறிலங்காவின் சட்டங்களுக்குட்பட்ட வகையிலும், சம்பந்தப்பட்ட பிராந்திய, கொமன்வெல்த், அனைத்துலக கடப்பாடுகளுக்கு அமையவும், சுயமாக முடிவெடுத்து செயற்படுவர்.

தேர்தல் கண்காணிப்புக்கான அனைத்துலக நியமங்களுக்கேற்ப இவர்கள் நடுநிலையாகவும், சுதந்திரமாகவும், செயற்படுவர்.

இவர்கள் தமது கண்காணிப்பு அறிக்கையை கொமன்வெல்த் செயலர், சிறிலங்கா  அரசாங்கம், தேர்தல் ஆணையாளர், அரசியல் கட்சிகள் மற்றும் கொமன்வெல்த் அரசாங்கங்களுக்கு வழங்குவதுடன், கொமன்வெல்த் இணையத்தளத்திலும் அது பிரசுரிக்கப்படும்.

கலாநிதி ஜோர்ஸ் அபேலா தலைமையிலான இந்தக் குழுவில், அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதி தேர்தல் ஆணையாளர் போல் டாசே, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர் நவீன் சாவ்லா, கென்யாவின் முன்னாள் லிபரல்  ஜனநாயக் கட்சியின் தலைவரும், கென்யாவில் பலகட்சி ஜனநாயக நிலையத்தின் பேராசிரியருமான லோரன்ஸ் கும்பே, மலேசிய மனித உரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்த சட்ட பேராசிரியர் ஆயிஷா பைடின்,  நைஜீரியாவின் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த இப்ராகிம் சிகிருலாஹி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்ர் புஸ்ரா கோஹர், ரினிட்டாட் அன் டுபாகோவை சேர்ந்த பொதுசன, தொடர்பாடல், ஊடக நிபுணர்  அடேல் ரூப்சந்த், பிரித்தானியாவின் முன்னாள் இராஜதந்திரி லின்டா டுபீல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவுக்கு உதவியாக,  ஐந்து பேர் கொண்ட கொமன்வெல்த் செயலகத்தின், தேர்தல் உதவிப் பிரிவின் தலைவர், மார்ட்டின் காசியே தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் பணியில் ஈடுபடும் என்றும் கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *