மேலும்

சிறிலங்காவுக்கான தரைவழிப்பாதை திட்டம் விரைவில் சாத்தியமாகும்- இந்திய அரசு நம்பிக்கை

road-rail-linkதமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில்  சாத்தியமாகக் கூடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபையில் நேற்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இதுதொடர்பாக பதிலளித்துள்ள இந்திய மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து இணை அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன்,

“தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில்  சாத்தியமாகக் கூடும்.

சிறிலங்காவையும், இந்தியாவையும் இணைக்கும் பாக்கு நீரிணைக்கு மேலான பாலத்தை அமைப்பது குறித்த திட்டத்துக்கு நிதியளிப்பது தொடர்பான சாத்திய ஆய்வை மேற்கொள்ளும்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கப்பல்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், இந்த இணைப்புப்பாதை அமைக்கும் திட்டம், கடலுக்கு அடியிலான சுரங்கப்பாதை மற்றும் கடலுக்கு மேலான மேம்பாலம் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும்.

இந்த திட்டம் இன்னமும் கருத்திட்ட நிலையிலேயே இருப்பதால், இந்த திட்டத்துக்குத் தேவைப்படும் காலம் தொடர்பாக இப்போது கருத்து வெளியிட முடியாது.

எவ்வாறாயினும் இந்த திட்டத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் அனுமதி வழங்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *