மேலும்

தமிழர் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தல் இது – யதீந்திரா

jahthindraஅமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கும் தேர்தல்களில் ஒன்றாக சிறிலங்கா தேர்தல் அமைந்துள்ள அதேவேளை,  தமிழ் மக்களின் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தலாகவும் இது அமைந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருமலை மாவட்ட வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

நேற்று திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“ஆசியாவில் இடம்பெறும் இரண்டு தேர்தல்களை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று இம்மாதம் நாம் எதிர்கொள்ளவுள்ள நாடாளுமன்ற தேர்தல்.

மற்றையது, கிழக்காசிய நாடான மியன்மாரில் எதிர்வரும் நொவம்பர் மாதம் இடம்பெறவுள்ள தேர்தல். சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு பணியகத்தின் முன்னைநாள்  பணிப்பாளர் அட்மிரல் டெனிஸ் பிளேயர் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் முன்னைநாள் தளபதியான பிளேயர் எழுதியிருந்த கட்டுரை ஒன்றிலேயே இந்தத் தகவலை தெரிவித்திருந்தார். இதிலிருந்தே இம்மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் சர்வதேச முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறும் ஒரு நாடாளுமன்ற தேர்தல் என்னும் வகையில் இது அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும்.

உண்மையில் ஒரு ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருந்தாலும் கூட அந்த மாற்றம் இன்னும் முழுமையடையவில்லை. இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின்னர்தான் ஆட்சி மாற்றம் உறுதிப்படுத்தப்படவுள்ளது.

தெற்கின் நிலைமைகள் எவ்வாறு மாற்றமுறும் என்று தெளிவாக எதனையும் கூறக்கூடிய நிலையில்லை என்பது எனது அபிப்பிராயம். எதுவும் நிகழலாம், ஆனால் நாங்கள் அரசியல் ரீதியில் பலமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பலமாக இருந்தால் பேரம் பேசலாம் என்று நான் கூறமாட்டேன். சிறிலங்கா ஆட்சியாளர்களை மட்டும் நம்பி எந்தவொரு பேரம் பேசலிலும் நாம் ஈடுபட முடியாது.

கடந்த 65 வருடங்களுக்கும் மேலாக இலங்கை தீவை மாறி மாறி ஆட்சி செய்த சிறிலங்கா ஆட்சியாளர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்டதே வரலாறு.

எனவே நாங்கள் இந்தக் காலத்தை மிகவும் நிதானமாக கையாள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியில் தோற்கடித்தார், இதன் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால் இதற்காக மகிந்த ராஜபக்சவை அமெரிக்காவோ ஜரோப்பிய ஒன்றிய நாடுகளோ எதிர்க்கவில்லை. யுத்தத்தின் போது அவர்கள் அனைவரும் மகிந்தவிற்கு உறுதுணையாகவே இருந்தனர்.

ஆனால், மகிந்த எப்போது அவர்களின் நலன்களுக்கு முரணாக நடந்து கொள்ள முயன்றாரோ அப்போதே மகிந்தவின் நாட்களை அவர்கள் எண்ணத் தொடங்கினர்.

இவ்வாறானதொரு சூழலில்தான் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஆனால் அந்த மாற்றத்தின் மூலமும் எதிர்பார்த்தது போன்று மகிந்தவை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்படுத்த முடியவில்லை.

மகிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இப்படியானதொரு சூழலில்தான் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

அமெரிக்கா தன்னுடைய நலன்களை கருத்தில் கொண்டு மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் இந்தத் தேர்தல்தான் இன்னொரு புறமாக, எங்களுக்கு எங்களுடைய நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தலாகவும் இருக்கிறது.

இந்த தேர்தல் முடிவின் பின்னர் தான் கூட்டமைப்பின் மக்கள் செல்வாக்கு எந்தளவிற்குள்ளது என்பதும் கணிப்பிடப்படும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு கருத்து “தமிழர் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தல் இது – யதீந்திரா”

  1. pragash says:

    Ellam yathartham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *