மேலும்

இராணுவத்தை வெளியேறக் கோரும் உரிமை விக்னேஸ்வரனுக்கு உள்ளது – நாடாளுமன்றில் சம்பந்தன்

R.sampanthanவடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில், தனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கும் அதனை வலியுறுத்துவதற்கும் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“நாடு இன்று ஒருவிதமான குழப்பத்திற்குள் இருந்து வருகின்றது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

போர் நிறைவடைந்த பின்னர் சிறிலங்காவுக்கு வருகை தந்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனிடம் அன்றைய அரசாங்கம் பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தது.

அத்துடன் அனைத்துலக நாடுகளிடமும் அதே வகையான உறுதிப்பாடுகளை வழங்கியிருந்தது. எனினும் அந்த உறுதி மொழிகள் அன்றைய அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

இதன் மூலம் கடப்பாடு மற்றும் பொறுப்பு என்பன மீறப்பட்டுள்ளன. அதன் பின்னரும் கூட அனைத்துலக சட்டங்கள் மீறப்பட்ட நிலைமையை காண முடியும்.

அனைத்துலக ரீதியில் இன்னும் புலிகள் இயங்கி வருவதாக கூறுகின்றனர். இது ஒரு புதிய விடயமல்ல. இதனை நாமும் அறிந்தே வைத்திருக்கின்றோம்.

இருந்தபோதிலும் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று வேண்டும் என்பதை வலியுறுத்தியே கடந்த அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் வாக்களித்து வந்துள்ளனர்.

நாம் முன்னைய அரசாங்கத்துடன் 18 சுற்றுப் பேச்சுகளை மேற்கொண்டிருந்தோம். இருப்பினும் எந்தவித முடிவும் இன்றிய நிலையில் அவர்களே அந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டனர்.

அனைத்துலகத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்ளாமைக்காக அன்றைய ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

உள்ளக விசாரணை ஒன்றே 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக நாடுகளின் கோரிக்கையாக இருந்தது.

எனினும் முன்னைய அரசாங்கம் அதனை செயற்படுத்தாத காரணத்தால் தான் அனைத்துலக விசாரணை ஒன்றுக்கு தள்ளப்பட்டுள்ளது.

அக்காலப் பகுதிகளில் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான விடயங்களை அன்றைய பெருந்தோட்ட அமைச்சர் நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளை, அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பின்வரிசையில் அமர்ந்திருந்ததையிட்டு வெட்கப்படுகின்றேன்.

நாம் புலிகளை ஆதரிக்கவில்லை. ஆனால் இங்குள்ளவர்கள் கூறுவது போன்று புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகள் அல்ல.

புலம்பெயர் தமிழர்களில், முதலீட்டாளர்கள் கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கின்றனர்.

வடக்கில் மட்டுமல்லாது முழு நாட்டிலும் முதலீடுகளை செய்து இந்நாட்டினை அபிவிருத்தி செய்ய விரும்புகின்றனர். ஐக்கிய இலங்கைக்குள் அவர்கள் செயற்படவே விரும்புகின்றனர்.

ஆனால் அவர்களைப் புலிகள் என்று சித்தரித்து அவர்கள் சிறிலங்கா  திரும்புவதையும் முதலீடுகளை மேற்கொள்ள முற்படுவதையும் தடுக்கிறீர்கள். சமூகப் பொறுப்புள்ளவர்களை இந்த நாட்டிக்குள் அனுமதிக்க மறுக்கின்றீர்கள்.

சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் அவர்களது நிர்வாகப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கு அனைத்து உரிமையும் கொண்டிருக்கிறார்.

அவ்வாறு கூறுவதால் அவரை விடுதலைப் புலியாக சித்திரிக்க முயற்சிக்கின்றனர்.

சுதந்திரக்கட்சி யில் தொங்கிக் கொண்டிருப்பவர்களே இவ்வாறு சித்தரிக்கின்றனர். இந்நாட்டில் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் புலிகள் என்றும் அச்சுறுத்தல்காரர்கள் என்றும் அனைத்துலகத்துக்கு சித்தரித்துக் காட்டுவதற்காக முயற்சிக்கின்றனர்.

இப்படி தொங்கிக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் நான் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன்.

இந்நாட்டில் வாழும் சகலருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும். அப்படி இல்லாது விடின் இறைமைபற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை” என்றார்.

ஒரு கருத்து “இராணுவத்தை வெளியேறக் கோரும் உரிமை விக்னேஸ்வரனுக்கு உள்ளது – நாடாளுமன்றில் சம்பந்தன்”

  1. மனோ says:

    இது தேர்தல் திருவிழாவுக்கான வாண விளையாட்டின் தொடக்கம். இது மத்தாப்பு மட்டுமே. இவை போல் பல மத்தாப்புகளும் அவுட்டுகளும் தேர்தல் வானில் நாம் பார்க்கலாம். தொடக்கி வைத்த சம்பந்தனுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

Leave a Reply to மனோ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *